UPDATED : ஜூலை 14, 2024 12:00 AM
ADDED : ஜூலை 14, 2024 08:49 PM

வானியல், வானியற்பியல் மற்றும் அதன் தொடர்புடைய இயற்பியல் அறிவியல்களில், ஆராய்ச்சி மேற்கொள்வதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஓர் மத்திய அரசு நிறுவனம், ஐ.ஐ.ஏ., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ்.
கடந்த 1786ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம், தொடர் வளர்ச்சி பிறகு 1975ம் ஆண்டு பெங்களூரு, கோரமங்களா வளாகத்தில் அமைக்கப்பட்டது. நாட்டின் சில பகுதிகளில் வானியல் கண்காணிப்பு மையங்களை கொண்டுள்ள இந்நிறுவனம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக ஐ.ஐ.ஏ., செயல்படுகிறது.
படிப்புகள் மற்றும் தகுதிகள்:
இந்நிறுவனம் பிஎச்.டி., ஒருங்கிணைந்த எம்.டெக்., - பிஎச்.டி., மற்றும் போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப்களை வழங்குகிறது. தேவையான துறையில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புடன் கேட் தேர்வு, ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கான 'நெட்' தேர்வு மற்றும் ஜெஸ்ட் தேர்வு போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் ஒன்றை எழுதுவதன் வாயிலாக இந்நிறுவனத்தில் சேர்க்கையை பெறலாம்.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் - ஐ.ஐ.எஸ்.சி.யுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, ஜே.ஏ.பி., எனும் கூட்டு வானியல் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் ஐ.ஐ.ஏ.,வில் சேர தகுதியுடையவர்கள். பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து முனைவர் படிப்பு மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பும் வழங்குகிறது.
போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப்:
ஐ.ஐ.ஏ., பல்வேறு போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப் திட்டங்களை வழங்குகிறது. முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த இயற்பியல் அல்லது கணிதம் சார்ந்த துறைகளில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 47 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஜே.ஆர்.எப்.,:
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் - ஜே.ஆர்.எப்., தகுதியுடன் பி.எச்டி., படிப்பில் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் மாணவர்கள் சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதி பெறுகிறார்கள். ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு மாதம் ரூ.37 ஆயிரமும், சீனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கு மாதம் ரூ.42 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர புத்தக மானியம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான சலுகைகளும் உண்டு. 5 ஆண்டுகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இன்டர்ன்ஷிப் திட்டம்
வானியல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இதர கல்வி நிறுவன மாணவர்களுக்காக 6 வாரங்கள் முதல் அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை 'விசிட்டிங் இன்டர்ன்ஷிப் திட்டம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது.
விபரங்களுக்கு:
www.iiap.res.in