அமெரிக்காவில் பகுதி நேர வேலையை உதறும் இந்திய மாணவர்கள்!
அமெரிக்காவில் பகுதி நேர வேலையை உதறும் இந்திய மாணவர்கள்!
UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 11:43 AM

புதுடில்லி:
அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பார்க்கும் இந்திய மாணவர்கள் பலர் அதனை ராஜினாமா செய்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் டிரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கப் போவதாகவும், அதனை உடனடியாக அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு சட்டப்படி சர்வதேச மாணவர்கள் எப்-1 விசாவில் வந்தவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் கல்லூரி வளாகத்திற்குள் பணியாற்றலாம். ஆனால், பல மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைறே்ற உணவகங்கள், கேஸ் ஸ்டேசன்கள், வணிக வளாகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது டிரம்ப்பின் கெடுபிடி காரணமாக ஏராளமானோர், ஒருவர் பின் ஒருவராக இந்த பணியை துறக்க ஆரம்பித்து உள்ளனர். இந்த வேலை முக்கியம் என்றாலும், கடன் வாங்கி இங்கு வந்து படிக்க வந்துள்ளதால், எங்கள் எதிர்காலத்துடன் விளையாட விரும்பவில்லை என சோகத்துடன் கூறுகின்றனர்.
இலினாய்சில் படிக்கும் அர்ஜூன் என்ற மாணவர் கூறுகையில், கல்லூரி முடிந்ததும் எனது செலவுக்காக சிறிய வளாகத்தில் பணியாற்றி வந்தேன். தினமும் ஆறுமணி நேரம் பணியாற்றுவேன். ஒரு நாளைக்கு ரூ.600 வரை சம்பாதித்தேன். இது போதுமானதாக இருந்தாலும், விதிகளை அதிகாரிகள் கடுமையாக்கப் போவதாக அறிவித்ததும் இந்த பணியை ராஜினாமா செய்து விட்டேன். சுமார் 42.5 லட்சம் கடன் வாங்கி இங்கு வந்துள்ளேன் என்றார்.
அதேபோல் நேஹா என்ற மாணவி கூறுகையில், வேலைபார்க்கும் இடங்களில் சோதனை செய்யப் போவதாக தெரியவந்துள்ளது. இதனால் நானும், எனது நண்பர்களும் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம். இது கடினமான முடிவு என்றாலும், நாடு கடத்தும் அபாயத்தில் சிக்க விரும்பவில்லை. மாணவர் விசா ரத்தாவதை விரும்பவில்லை. ஏராளமான பெற்றோர், நிறைய தியாகம் செய்து இங்கு குழந்தைகளை அனுப்பி உள்ளனர்.
மீண்டும் பணியில் சேர்வதற்கு முன்னர், நிலைமையை ஆய்வு செய்தே முடிவு செய்வோம். அதுவரை பணம் சேமித்தும், கடன் வாங்கியும், குடும்பத்திடம் பணம் பெற்றோரிடம் பணம் கேட்டும் முடிவு செய்வோம் எனக்கூறியுள்ளனர்.
புதிய விதிமுறைகள் காரணமாக நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஏராளமானோர் உள்ளாகி வருவதாக தெரிவித்து உள்ளனர்.