லட்சியத்துக்காக போராடும் இந்திய பெண்கள்: அமெரிக்க தூதர் பாராட்டு
லட்சியத்துக்காக போராடும் இந்திய பெண்கள்: அமெரிக்க தூதர் பாராட்டு
UPDATED : அக் 14, 2024 12:00 AM
ADDED : அக் 14, 2024 10:06 AM
வாஷிங்டன்:
இந்தியாவில் உள்ள பெண்கள் கனவு காண்கிறார்கள். அவற்றை அடைய போராடுவார்கள் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
துர்கா பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து, சமூகவலைதளத்தில், அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
பெண்களின் வலிமை, தைரியம் மற்றும் விடா முயற்சியை கொண்டாடுவதற்கான அற்புதமான நேரம். இந்தியாவில் நான் சந்திக்கும் பெண்கள் கனவு காண்கிறார்கள். அவற்றை அடைய போராடுவார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்கள் தங்களது உறவுகளை வழிநடத்தி மாற்றங்களை உருவாக்குபவர்கள்.
பெண்கள் வெற்றி பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நாம் எடுக்க வேண்டும். பெண்கள் பள்ளிகளுக்கு நுழைவதை உறுதி செய்ய வேண்டும். உயர்கல்வி பெற அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுதான் தொழில் செய்வதில் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும். மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறோம். மத சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.