அதிக நேரம் வேலை செய்வதில் இந்தியப்பெண்கள் உலக அளவில் சாதனை!
அதிக நேரம் வேலை செய்வதில் இந்தியப்பெண்கள் உலக அளவில் சாதனை!
UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 06:22 PM
புதுடில்லி:
இந்திய ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெண்கள் வாரத்திற்கு 57 மணி நேரம் வேலைபார்ப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது; இது உலக அளவிலான சாதனை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன்(26), சி.ஏ., படித்து முடித்தவர்; பிரபல எர்னஸ்ட் அண்டு யங் கணக்கு தணிக்கை நிறுவனத்தின் துணைநிறுவனமான எஸ்.ஆர்.பாட்லிபாய் புனே கிளையில் பணியில் சேர்ந்தார். நான்கு மாதங்கள் பணி செய்த நிலையில், கடுமையான உடல் சோர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலை 20ல் உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தாய், எர்னஸ்ட் அண்டு யங் நிறுவனத்திற்கு சில நாட்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த விவகாரம் விவாதப்பொருளானது. அதிகப்படியான வேலைப்பளு தான் தங்கள் மகள் உயிரிழப்புக்கு காரணம் என்பது அன்னாவின் பெற்றோர் புகார்.
இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் எவ்வளவு நேரம் பணியாற்றுகிறார்கள் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி இந்திய ஐடி செக்டார், மீடியா துறைகளில் பணியாற்றும் பெண்கள் வாரத்திற்கு 5 நாட்களில் தினமும் 11 மணி நேரம் பணியாற்றுகின்றனர். 6 நாட்கள் என்றால் தினமும் 9 மணி நேரம் பணியாற்றுகின்றனர். அதுவே 24 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் வாரத்திற்கு 57 மணி நேரம் பணியாற்றுகின்றனர். தொழில்நுட்ப துறையில் அனைத்து வயது பெண்களும் வாரத்திற்கு 55 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.
சர்வதேச அளவில் பெண்கள் அதிக நேரம் பணியாற்றுவது இந்தியாவில் தான். மற்ற நாடுகளை பொறுத்தவரை ஐடி மற்றும் மீடியாக்களில் ஜெர்மனி பெண்கள் வாரத்திற்கு 32 மணி நேரமும், ரஷ்ய பெண்கள் வாரத்திற்கு 40 மணி நேரமும் பணி புரிகின்றனர்.
இந்தியாவில் தொழில்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகளில் 8.5 சதவீத பெண்களும், ஐடி துறையில் 20 சதவீத பெண்களும் பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.