இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி: என்.சி.சி., பேரணியில் பிரதமர் பெருமிதம்
இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி: என்.சி.சி., பேரணியில் பிரதமர் பெருமிதம்
UPDATED : ஜன 28, 2025 12:00 AM
ADDED : ஜன 28, 2025 12:10 PM
புதுடில்லி:
இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால்தான் நான் உங்களை உலக நன்மைக்கான சக்தி என அழைக்கிறேன், என்று பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.
தொடர்ந்து நடந்த விழாவில் அவர் பேசியதாவது:
தற்போது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் உலகம் முழுவதும் எந்த வளர்ச்சியையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. கடந்த பல்லாண்டுகளாக நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றுவதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது.
கடந்த ஆண்டுகளில் என்.சி.சி.,யின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பணியாற்றியுள்ளதில் நான் திருப்தி அடைகிறேன். ஒரு தேர்தல், ஒரு நாடு என்பது இளைஞர்களின் எதிர்காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், அது குறித்த விவாதத்தைத் தொடருமாறு என்.சி.சி.,, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு மாதமும் தேர்தல்கள் நடத்தப்பட்டால், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் படிக்க மாணவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கும்? விக்சித் பாரத் என்ற நோக்கத்தில் கவனம் செலுத்துமாறு என்.சி.சி., மாணவர்களுடன் சேர்ந்து நாட்டின் இளைஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் இது இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும், சர்வதேச அளவில் ஒரு நாடாக வளரவும் உதவும். 2014ம் ஆண்டில், தேசிய மாணவர் படையில் 14 லட்சம் பேர் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை எட்டியுள்ளது. அவர்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது.
இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால்தான் நான் உங்களை உலக நன்மைக்கான சக்தி என்று அழைக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.