மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வுகள் உதவி இயக்குனர் தகவல்
மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வுகள் உதவி இயக்குனர் தகவல்
UPDATED : நவ 20, 2024 12:00 AM
ADDED : நவ 20, 2024 11:43 AM
ஊட்டி:
நீலகிரியில், 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனி தேர்வர்கள், 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் குமார் அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் தனி தேர்வு மையங்களில் கடந்த மார்ச், 2019ம் ஆண்டு முதல் செப்., 2020 வரையிலான பருவங்களில், 10ம் வகுப்பு, மேல்நிலை தேர்வு எழுதிய தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அத்தேர்வு மையங்கள் மூலமாக நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் பெறப்படாத சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் உள்ளன. தேர்வுத்துறை விதிமுறைகளின் படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.
இதனால், அந்த குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனி தேர்வர்கள், 90 நாட்களுக்குள் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும்.
தவறினால் மேற்படி தேர்வு பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.