சென்னை இந்திய கடல்சார் பல்கலையில் புத்தாக்க மையம் துவக்கம்!
சென்னை இந்திய கடல்சார் பல்கலையில் புத்தாக்க மையம் துவக்கம்!
UPDATED : ஜூலை 16, 2026 09:59 AM
ADDED : ஜூலை 16, 2026 10:11 AM

சென்னை:
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐ-சீஸ் எனும் புத்தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள பல்கலைக்கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், இதன் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி.சங்கர் மையத்தைத் திறந்து வைத்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த கடல்சார் புத்தாக்க மையம், மாணவர்கள், கடல்சார் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளரும் தொழில்முனைவோர் மத்தியில் கடல்சார் கண்டுபிடிப்பு, தொழில்முனைவு மற்றும் நிறுவன மேம்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு பிரத்யேக தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் உரையாற்றிய துணைவேந்தர் டாக்டர் மாலினி வி.சங்கர் கூறியதாவது:
ஐ.எம்.யு., ஐ-சீஸ் முயற்சிகள், உலகளாவிய கடல்சார் தலைமையாக உருவெடுக்கும், இது இந்தியாவின் தொலைநோக்கு இலக்குக்கு பெரும் பங்காற்றும். கடல்சார் தொழில்துறைக்கான சவால்களுக்கு தீர்வுகாண இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு பேருதவி புரியும்.
மேலும், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் உந்துதலால், ஐ.ஐ.டி., மெட்ராஸ், ஐ.ஐ.டி., பாம்பே மற்றும் சென்னை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சியின் பயனாக இந்தப் புதிய மையம் உருவாகியுள்ளது.
ஒரு முதன்மையான மத்திய பல்கலைக்கழகத்தின் அடையாளம் என்பது வகுப்பறை கற்றலோடு நின்றுவிடாமல், ஆராய்ச்சி, வெளியீடுகள் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றையும் உள்ளடக்க வேண்டும். இந்த ஆய்வகம் தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையே ஒரு இணக்கமான உறவை வளர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து புத்தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பல்கலைக்கழகத்தின் இணைத் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீ ராஜூ பாலாஜி வழங்கினார்.
தொடர்ந்து, அந்த நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியுதவியாக ரூ.60 லட்சத்துக்கான காசோலைகளைத் துணைவேந்தர் வழங்கினார். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மெரிடைம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், ஐ-சீஸ் மைய இயக்குனர் டாக்டர் மூர்த்தி, ஐ.ஐ.டி., மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர் முரளி ஆகியோருடன் கல்வித்துறை மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
