கண்காணிப்பு கேமரா பொருத்தினால் முறைகேடுகளை தவிர்க்கலாம்
கண்காணிப்பு கேமரா பொருத்தினால் முறைகேடுகளை தவிர்க்கலாம்
UPDATED : ஏப் 13, 2025 12:00 AM
ADDED : ஏப் 13, 2025 01:36 PM

கடலுார்:
கடலுார் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஸ்க்ரைப் எனப்படும் சொல்வதை எழுதுபவர் நடைமுறையில், முறைகேடுநடப்பதாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர்.
ஸ்க்ரைப் நடைமுறை விபரம் அறிந்த கல்வியாளர்கள் கூறியதாவது:
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், கையால் எழுத முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும், தேர்வுக்கு முன் விபத்தில் சிக்கி, எழுதும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கும், உதவியாளரை நியமித்துக் கொள்ளும் சலுகை உண்டு. அதாவது வினாவை, உதவியாளர் வாசிப்பார்.
தேர்வெழுதும் மாணவர், அதற்கான விடையை கூறுவார். அதைக் கேட்டு உதவியாளர், தேர்வுத்தாளில் எழுதுவார். இது, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உரிமையை பாதுகாக்கவும், திடீர் விபத்தால் தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டவும், இந்த முறையை அரசு அமலாக்கியது. துவக்கத்தில், இது உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்த நிலையில், தற்போது, இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.
முக்கியமாக, படிப்பில் சராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்கு, விபத்தில் கை எலும்பு முறிந்ததாக மருத்துவச் சான்றிதழ் பெற்று, ஸ்கிரைப் எனும் தேர்வு உதவியாளரை நியமித்து, தலைமை ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் மேலும், மாற்றுத்திறனாளிகளில், இடது கை பாதிக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த பாதிப்பு உள்ளவர்கள், வாய் பேச முடியாதவர்கள், கல்விகுறைபாடு உள்ளோருக்கும், ஸ்ரைப் நியமிக்கின்றனர்.
இதில் நியமிக்கப்படும் ஸ்கிரைப் நபர், தான் சொல்வதை தவறாக எழுதினார் என குற்றம் சாட்டியதால், அந்தந்ததேர்வுக்கு அந்தந்த பாடம் சார்ந்த ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர்.அவ்வாறு ஸ்கிரைபாக செல்லும் ஆசிரியர்கள், மாணவர் தவறான பதில் சொன்னாலும், சரியான பதிலை எழுதுகின்றனர். சில மாணவர்கள், ஆசிரியர்களை நன்றாக படித்து வரும்படியும் வலியுறுத்துகின்றனர். இதனால், கல்வித் தரத்தில் குறைந்த மாணவர்கள் கூட, பள்ளியில் முதல் மதிப்பெண் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தேர்வறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால், இவ்வாறான முறைகேடுகளை தவிர்த்து, நேர்மையான தேர்வை நடத்தலாம்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில், சி.பி.எஸ்.இ., தேர்வறைகளிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அதேபோல், தமிழகத்திலும் நிறுவினால், பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க முடியும். மாற்றுத்திறனாளி மாணவர்களால், தேர்வு சதவீதம் பாதிக்கப்படக் கூடாது என, அரசு நினைக்கிறது. அப்படியானால், அவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கி விடலாம்.
நன்றாகப் படித்து, நேர்மையாக தேர்வெழுதி, நிறைய மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ள மாணவர்களுக்கு மட்டும், ஸ்க்ரைப் நியமிக்கலாம். இப்படிப்பட்ட நிலை இல்லாததால்தான், போலி மருத்துவசான்றிதழ்களைப் பெற்று, முறைகேடுகளை செய்யும்படி, தலைமை ஆசிரியர்கள், ஸ்கிரைப் ஆசிரியர்களுக்கு நெருக்கடி தருகின்றனர்.
முன்பெல்லாம், மாவட்டத்தில், 10 - 20 என்றிருந்த ஸ்கிரைப் எண்ணிக்கை, தற்போது, 500 - 1,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இது, தேர்வெழுதும் நோக்கத்தில் வந்த விழிப்புணர்வு அல்ல; முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற தவறான போக்கு.முக்கியமாக, நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ளவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கு, அவர்களே தேர்வெழுதும் வகையில், கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். ஆனால்,ஸ்கிரைப் நியமிக்கப்படுகின்றனர் அறிவையும், நம்பிக்கையையும் வழங்க வேண்டிய கல்வித் துறை, தேர்ச்சி விகிதம் என்ற எண்ணிக்கையை நோக்கி செல்வது வேதனையானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த புகார் குறித்து, பொதுத் தேர்வு துறை இயக்குநர் லதா, இணை இயக்குநர் மகேஷ்வரியை தொடர்புகொண்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

