பள்ளிகளில் சிறு தானிய உருண்டைகள் மற்றும் மோர் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள்
பள்ளிகளில் சிறு தானிய உருண்டைகள் மற்றும் மோர் விற்பனை செய்வதற்கான வழிமுறைகள்
UPDATED : செப் 05, 2025 12:00 AM
ADDED : செப் 05, 2025 10:43 AM

கோவை:
'பள்ளி கேன்டீன்களில் சிறுதானிய உருண்டைகள், மோர் போன்றவற்றை விற்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தனியார் பள்ளி விடுதி உணவகங்கள், பள்ளி கேன்டீன், அரசு பள்ளி சத்துணவு திட்ட உணவகங்கள், ஆய்வு செய்யப்படுகின்றன. பள்ளி கேன்டீன்களில் ஜூஸ், ஐஸ்கிரீம், பல்வேறு நிறுவனங்களின் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பொருட்களே, அதிகம் விற்கப்படுவதை உறுதி செய்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
மாணவர்கள் அதிக நேரம் பள்ளியில் செலவிடுகின்றனர். ஆரோக்கிய உணவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது பள்ளிகளின் கடமை. சூடாக உணவு எடுத்து வரும் மாணவர்கள், பிளாஸ்டிக் டப்பர்வேர் பயன்படுத்தாமலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் தவிர்த்து, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில் பயன்படுத்தவும் அறிவுறுத்தினோம்.
கேன்டீன்களில் சிறுதானிய உருண்டைகள், மோர் போன்ற ஊட்டச்சத்து மிக்க பொருட்களை விற்க அறிவுறுத்தினோம். 'மாணவர்கள் விரும்புவதில்லை' என பள்ளி தரப்பில் கூறுகின்றனர்.
அவர்களுக்கு பழக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை, பள்ளிகள் பொறுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரும் இவ் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.