நுண்ணறிவு அமைப்புகள் குறித்து காஞ்சியில் சர்வதேச மாநாடு
நுண்ணறிவு அமைப்புகள் குறித்து காஞ்சியில் சர்வதேச மாநாடு
UPDATED : மார் 13, 2026 04:07 PM
ADDED : மார் 13, 2026 04:08 PM
காஞ்சிபுரம்:
நிலையான எதிர்காலத்திற்கான நுண்ணறிவு அமைப்புகள் குறித்த சர்வதேச மாநாடு, காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், நேற்று நடந்தது.
நிலையான எதிர்காலத்திற்கான நுண்ணறிவு அமைப்புகள் குறித்து, ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், அறிஞர்கள், இணைய உலகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில், தங்கள் புதுமையான ஆராய்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், சர்வதேச நுண்ணறிவு அமைப்புகள் மாநாடு நேற்று நடந்தது.
மாநாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலச்சந்திரன் வரவேற்றார். இயந்திர பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் ராஜ்மோகன், மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் சாதனைகள் குறித்த நுண்ணறிவுகள் குறித்து உரையாற்றினார்.
இதில், பல நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து 800 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஒவ்வொரு கட்டுரையும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் உள்ளிட்ட 50 மதிப்பாய்வாளர்களால் மதிப்பீடு செய்த பின், 200 உயர்தர ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற டாட்டா செமிகண்டக்டர் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட்டைச் சேர்ந்த சரண் குருமூர்த்தி, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சிவகுமார் கல்யாணராமன் உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மாநாட்டில் உரையாற்றினர்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் புல தலைவர் ரத்தினகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
