சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட்: சென்னை மாணவருக்கு தங்கம்
சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட்: சென்னை மாணவருக்கு தங்கம்
UPDATED : ஆக 06, 2025 12:00 AM
ADDED : ஆக 06, 2025 09:06 AM
புதுடில்லி:
சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட் தொடரில் சென்னை மாணவர், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுதவிர, இந்தியா சார்பில் பங்கேற்ற மற்றொரு மாணவர் வெண்கலம் வென்றார்.
சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் ஒன்றான சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட் தொடர், பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களின் மொழியியல் திறனை வளர்க்கும் நோக்கில் பல்வேறு மொழிகளின் அமைப்பு, இலக்கணம், கலாசாரம் போன்ற கூறுகள், புதிர்கள் உட்பட பல்வேறு சவால் நிறைந்த போட்டிகளாக நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான போட்டித்தொடர், கிழக்காசிய நாடான தைவான் தலைநகர் தைபேயில் கடந்த மாதம் 20 முதல் 27ம் தேதி வரை நடந்தது. இதில், இந்தியா உட்பட, 42 நாடுகளைச் சேர்ந்த, 57 குழுக்கள் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவிலும் நான்கு மாணவர்கள் என மொத்தம், 228 பேர் போட்டியிட்டனர்.
இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த வாகீசன் சுரேந்திரன், டில்லியைச் சேர்ந்த அத்வை மிஸ்ரா, பெங்களூரைச் சேர்ந்த நந்தா கோவிந்த், ஹைதராபாதைச் சேர்ந்த புவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில், சிறப்பான பங்களிப்பை அளித்த சென்னை மாணவர் வாகீசன், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல் டில்லி மாணவர் அத்வை மிஸ்ரா, வெண்கல பதக்கம் வென்றார். மற்ற இரண்டு மாணவர்கள் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக கவுரவிக்கப்பட்டனர்.