இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு: கிராமங்களில் அதிகம்!
இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு: கிராமங்களில் அதிகம்!
UPDATED : ஜன 18, 2025 12:00 AM
ADDED : ஜன 18, 2025 09:57 PM
புதுடில்லி:
இந்தியாவில் இணையசேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 90 கோடியை இந்தாண்டு தாண்டும் என என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய இணையசேவை மற்றும் மொபைல் சங்கம்(Internet and Mobile of India(IAMAI)) மற்றும் காண்டர் என்ற நிறுவனங்கள் இணைந்து 2024 ல் இந்தியாவில் இணையசேவை என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில், 2024 ல் 88.6 கோடி பேர் இணைய சேவையை பயன்படுத்தி வந்தனர். இது 2025 ல் 90 கோடி பேர் என்ற எண்ணிக்கையை தாண்டும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 8 சதவீதம் அதிகம்.
கிராமப்புறங்கள் அதிகம்
இணையசேவையை கிராமப்புறங்களில் 48.8 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். நகர்ப்புறங்களில் 39.7 கோடி பேர் நகர்ப்புறங்களில் உள்ளனர். கிராமப்புறங்களில் இணையசேவையை பயன்படுத்துவோரில் 47 சதவீதம் பேர் பெண்கள்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் இணைய சேவை பயன்பாட்டாளர்கள், தினமும் சராசரியாக 90 நிமிடங்கள் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். இது கிராமப்புறங்களில் 94 நிமிடங்கள் ஆகும். ஓடிடி சேவை, சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களுக்காக அதிகளவில் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். பிராந்திய மொழிகளின் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இணையத்தை பயன்படுத்துவோரில் 57 சதவீதம் பேர் பிராந்திய மொழிகளையே தேர்வு செய்கின்றனர்.
முக்கிய அம்சங்கள்
*டிவிக்களுக்கு சந்தா செலுத்தியவர்களில் 28.6 கோடி பேரின் கவனம் இணையத்தை நோக்கி திரும்பி உள்ளது.
*டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை காட்சி பொருளாக மாறி வருகிறது.
*ஏஐ பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆன்லைன் அனுபவத்தை ஏஐ மேம்படுத்துகிறது என 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
*அதேநேரத்தில் கிராமப்புறங்களில் 41 சதவீதம் பேர் இணையத்தை பயன்படுத்தாமலே உள்ளனர். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது(25%), வசதி இல்லாதது(16%), உள்ளூர் மொழிகளில் தேவைப்படும் விஷயங்கள் கிடைக்காதது(13%) ஆகியன முக்கிய காரணம் ஆகும்.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.