கலை இலக்கிய மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் புதுச்சேரியில் முதல் முறையாக அமல்
கலை இலக்கிய மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் புதுச்சேரியில் முதல் முறையாக அமல்
UPDATED : ஜூன் 13, 2025 12:00 AM
ADDED : ஜூன் 13, 2025 08:16 AM

புதுச்சேரி:
புதிய கல்வி கொள்கையின்படி முதல் முறையாக கலை இலக்கிய மாணவர்களும் தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை புதுச்சேரி உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 2023-24 கல்வியாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கல்வி கொள்கையின்படி இரண்டாமாண்டு நான்காம் பருவத்தில் மாணவர்கள் கட்டாயம் இன்டர்ன்ஷிப் எனும் தொழிற்பயிற்சி பெற வேண்டும். இது தொழில் படிப்புகளுக்கு மட்டுமின்றி கலை இலக்கிய மாணவர்களுக்கும் பொருந்தும்.
இதன்படி 2023-24 கல்வியாண்டில் சேர்ந்த கலை இலக்கிய மாணவர்கள் தற்போது தொழிற் பயிற்சியை பெற்று வருகின்றனர். பி.டெக்., உள்ளிட்ட தொழில் படிப்பு மாணவர்கள் தொழிற்சாலைகளில் பயிற்சி பெற முடியும். ஆனால் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட கலை இலக்கியம் பயிலும் மாணவர்கள் அப்படி தொழிற்சாலைகளில் பயிற்சி பெற முடியாது.
இதனால் இம்மாணவர்கள் கலை பண்பாட்டு துறை வாயிலாக தற்போது நுாலகங்களில் தொழிற் பயிற்சி பெற்று வருகின்றனர்.இப்படி கலை இலக்கியம் பயிலும் மாணவர்கள் தொழிற் பயிற்சி பெறுவது இதுவே முதல் முறையாகும். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ் துறை பி.ஏ., இரண்டாமாண்டு நான்காம் பருவம் படிக்கும் மாணவிகள் தங்களது நுாலகத்தில் மட்டுமின்றி பிற நுாலகங்களில் பிரிந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது குறித்து தமிழ் துறை பேராசிரியர்கள் கூறும்போது, புதிய கல்வி கொள்கையின்படி பி.ஏ., தமிழ் பயிலும் மாணவிகள் தொழிற்பயிற்சி பெறுகின்றனர். கலை இலக்கிய மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவது புதுச்சேரியில் இதுவே முதல்முறை.
கல்லுாரி நுாலகத்தில் 24 பேரும், ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் 32, பாரதியார் நினைவு இல்லத்தில் 5, காமராஜர் மணி மண்டப நுாலகத்தில் 10 பேர் பயிற்சி பெறுகின்றனர். நுாலகத்தின் கட்டமைப்பு, நுால்களை கையாளும் முறைகளை கற்று வருகின்றனர். புதிய கல்வி கொள்கையின்படி விரும்பியது; விருப்பம் அற்றது என்று ஏதுவும் கிடையாது. புதிய கல்வி கொள்கையின்படி கலை இலக்கிய மாணவர்களும் கட்டாயம் தொழிற்பயிற்சி பெற வேண்டும் என்றனர்.

