தேர்வு அறை ஒதுக்கீட்டில் குளறுபடி; அரசு கல்லுாரி மாணவர்கள் பரிதவிப்பு
தேர்வு அறை ஒதுக்கீட்டில் குளறுபடி; அரசு கல்லுாரி மாணவர்கள் பரிதவிப்பு
UPDATED : மே 04, 2024 12:00 AM
ADDED : மே 04, 2024 09:58 PM
கடலுார்:
கடலுாரில் தேர்வு அறை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட குளறுபடியால், அரசு கல்லுாரி மாணவர்கள் தாமதமாக தேர்வு எழுதினர்.
கடலுார், தேவனாம்பட்டினத்தில் இயங்கி வரும் அரசு பெரியார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சுமார் 5,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரியில், கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த 19ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், கல்லுாரி மாணவர்களுக்கு நேற்று துவங்கிய தேர்விற்கு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதனையொட்டி தேர்வு மையத்திற்கு ரெகுலர் மற்றும் அரியர் மாணவர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். ஆனால், அதற்கேற்ப தேர்வறை ஒதுக்கீடு செய்யாததால், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர்கள், காலியாக இருந்த வகுப்பறைகளில் இருக்கைகள் அமைத்து மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர். இதனால், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாலை 3:00 மணிக்கு பிறகே தேர்வு எழுத துவங்கினர். தாமதமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.