மாதவிடாய் என்பது என்ன தொற்றுநோயா? மாணவி தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மக்கள் வேதனை
மாதவிடாய் என்பது என்ன தொற்றுநோயா? மாணவி தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மக்கள் வேதனை
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:14 AM
கோவை:
கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் பகுதியில் செயல்படும், சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும், பருவம் அடைந்த மாணவியை தனிமைப்படுத்தி, படிக்கட்டில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம், சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கோவை மக்களிடம் பேசினோம்...
மனநலத்திற்கு தீங்கு
ராமசாமி,56, தனியார் கல்லூரி ஊழியர்:
ஆசிரியர்கள் தங்கள் பணியறிவைப் பின்பற்றாமல் இவ்வாறு நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது. மாணவியின் மனநிலையை இது பெரிதும் பாதிக்கக்கூடும்.
இது எந்த காலம்
வெள்ளியங்கிரி, 56, சலூன் கடை உரிமையாளர்:
இது நவீன காலமா, இல்லை அறிவு இல்லாத காலமா? தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து இருக்கும் சமயத்தில், ஒரு பள்ளியில் இப்படி நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
எங்கள் காலத்திலேயே இல்லை
சரஸ்வதி,55, தனியார் ஊழியர்:
மாதா மாதம் மாதவிடாய் ஏற்படும். ஒவ்வொரு முறையும் இப்படியா நடத்தப்போகிறார்கள்? நாங்கள் படித்த காலத்திலும், இதுபோன்ற நிகழ்வுகள் இல்லையே.
இப்படி நடக்கலாமா?
மேகா, 21, கல்லூரி மாணவி:
ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல், ஒரே வகுப்பில் படிக்கிறோம். அதே சமயம் மாதவிடாய் காரணமாக ஒருவரை தனிமைப்படுத்துவதுஅசிங்கமானது.
இது தீட்டா?
மானசா,26, திருநங்கை
: இன்றும் எங்களை, இந்த சமூகம் வேறுபடுத்திப் பார்க்கிறது. பருவம் அடைவது ஒரு இயற்கை நிகழ்வுதானே? அதற்காக புறக்கணிப்பது எந்த நியாயம்?
இப்படி செய்வாங்களா?
பிரணவ் விநாயக்,20, கல்லூரி மாணவர்:
அந்த மாணவியின் மனநிலை, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்? ஆண்கள் கூட இப்படி செய்ய மாட்டார்கள். பெண் ஆசிரியை செய்தார் என்பது, வெட்கம் தரும் செயல்.
இது என்ன நோயா?
ஜெயஸ்ரீ,22, கல்லுாரி மாணவி:
மாணவியை இவ்வாறு நடத்தியது, மனிதநேயம் இல்லாத செயல். இப்படி ஒரு சமயத்திலும் மாணவிக்கு ஆதரவு அளிக்காமல், தனிமைப்படுத்துவது தவறு. இது என்ன தொற்று நோயா?
தொடர வேண்டாமே
சுபாஷினி,25, கல்லூரி மாணவி:
எங்கள் அம்மா காலத்தில், இந்த கட்டுப்பாடுகளை நாங்கள் பின்பற்றுவதில்லை. இன்றைய தலைமுறையில் இவை ஏற்கக்கூடியவை அல்ல. இந்த பழக்கங்கள் இன்னும் தொடருவது வேதனையானது.
சிந்தனையிலேயே பின்னடைவு
லதா,65, முன்னாள் கல்வித்துறை அதிகாரி:
இது ஒரு பின்தங்கிய எண்ணப்போக்கைக் காட்டுகிறது. பருவமடைவது என்பது இயற்கையான ஒன்று. மாணவியை தனிமைப்படுத்தி. ஒடுக்குமுறையை ஏற்படுத்தியுள்ளனர். கல்வித்துறை இவ்விதமான சம்பவங்கள், மீண்டும் நடக்காதபடி கண்காணிக்க வேண்டும்.
துரைராஜ்,55, டிராவல்ஸ் ஊழியர்:
நாம் முற்போக்கு சமூகத்தில் வாழ்கிறோம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படி நடக்கும் அவலங்களைப் பார்க்கையில் கோபம் வருகிறது.
கேவலமான செயல்
உலகம் எங்கேயோ சென்று கொண்டிருக்கும்
ரேணுகா, தனியார் வங்கி ஊழியர்:
தற்போதைய அதிநவீன காலத்தில், இதுபோன்ற செயல்கள் மிக மிக கேவலமானது. மீண்டும் கற்காலத்திற்கு செல்கிறோமா என எண்ண தோன்றுகிறது.