UPDATED : டிச 17, 2025 09:49 PM
ADDED : டிச 17, 2025 09:54 PM

மதுரை:
தமிழகத்தில் 22 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஜி.பி.எப்.,) பயன்பெற்ற 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களை பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு (சி.பி.எஸ்.,) மாற அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதன் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிடும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2003 ஏப்ரலுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஜி.பி.எப்., திட்டத்தில் உள்ளனர். 2003, ஏப்.,1க்கு பின் நியமிக்கப்பட்டவர்கள் சி.பி.எஸ்.,ல் சேர்க்கப்பட்டனர். அப்போது முதல் 'ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களில் பிரதான கோஷமாக இருப்பது, 'மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்பது தான்.
தி.மு.க., அ.தி.மு.க., என இரண்டு திராவிடக் கட்சிகளுமே 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக கொடுத்து வருகின்றன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கரையாண்டுகளுக்கு பின் ஒருவழியாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. ஆனாலும் அந்த குழுவால் எந்த பலனும் இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
தி.மு.க.,வுக்கு நெருக்கடி இந்நிலையில், கல்வித்துறையில், ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை திட்டத்தில் ஆசிரியர்கள் விபரங்கள் பதிவேற்றம் செய்தபோது அதற்கான சாப்ட்வேரில், 2003 ஏப்., 1க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை ஜி.பி.எப்., திட்டத்தில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
அதற்கு பதில் அவர்களை சி.பி.எஸ்., திட்டத்திற்கு மாறுங்கள் என அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 2003 முதல் தற்போது வரை ஜி.பி.எப்., திட்டத்தில் உள்ள அவர்கள் வங்கி கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெற்று வருகின்றனர். ஆனாலும் அவர்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றம் சென்ற நிலையில் அவர்களை ஜி.பி.எப்., திட்டத்தில் நீடிக்க உத்தரவு பிறப்பித்தும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் தனித்தனியாக ஆசிரியர், அரசு ஊழியர்கள் நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் ஓய்வு பெறும் நிலையில் மனஉளைச்சலில் உள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.,13ல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிர்வாகிகள், இப்பிரச்னை குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்தனர். இது சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கைவிடுகிறதா
தமிழக அரசு இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:
மதுரை உட்பட பல மாவட்டங்களில் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு ஒன்றில், உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில், 'இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்ற ரீதியில், பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரை ஜி.பி.எப்., திட்டத்திலேயே தொடர வேண்டும்' என உத்தரவிட்டது.
ஆனால் இதை ஏற்று, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் பதிவேற்றம் செய்யும் 'சாப்ட்வேரில்' திருத்தம் மேற்கொள்ள கல்வித் துறை முன்வரவில்லை. 22 ஆண்டுகளாக ஜி.பி.எப்.,ல் பயன்பெறுவோரை 'சி.பி.எஸ்.,க்கு மாறுங்கள்' என தொடர்ந்து கடிதம் கேட்டு கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
இதற்கிடையே இது தொடர்பான வழக்கு ஒன்றில், 'பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா' என்ற நீதிமன்ற கேள்விக்கு, 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்பட்டு வருவதாக' தமிழக நிதித்துறை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தில், பாதிக்கப்பட்ட சில நுாறு பேரையே ஜி.பி.எப்., திட்டத்தில் சேர்க்க முன்வராத தமிழக அரசு, 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஜி.பி.எப்., திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை. இதை கைவிடும் முடிவில் உள்ளது. இனிமேல் ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் ஆலோசனையில் உள்ளோம் என்றார்.

