ஐ.டி., வேலையை உதறிவிட்டு சாக்லேட் பேக்டரி நடத்தும் தம்பதி
ஐ.டி., வேலையை உதறிவிட்டு சாக்லேட் பேக்டரி நடத்தும் தம்பதி
UPDATED : ஜன 18, 2026 03:04 PM
ADDED : ஜன 18, 2026 03:08 PM

பொதுவாக, ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்ற பலரும் விரும்புவர். ஏன் என்றால் ஐ.டி., நிறுவனங்கள் லட்சக்கணக்கான ரூபாயை ஊதியமாக வழங்குகின்றன. இத்தகைய வேலையை உதறி தள்ளிய தம்பதி, சாக்லேட் பேக்டரி துவக்கி வெற்றிகரமாக நடத்துகின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் நகர் அருகேயுள்ள ஆர்யாபு கிராமத்தில் வசிப்பவர் கேசவமூர்த்தி. இவரது மனைவி பூர்சணா ஸ்ரீ. இந்த தம்பதி, கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரில், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினர்; கைநிறைய சம்பாதித்தனர்.
கர்நாடகாவில் கொரோனா பரவிய போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தம்பதி சொந்த கிராமத்துக்கு வந்து வசிக்க துவங்கினர். கேசவமூர்த்தியின் குடும்பம், பெரிய கூட்டு குடும்பமாகும். ஐந்து ஏக்கர் தோட்டம் உள்ளது. இதில், பல பயிர்கள் விளைகின்றன.
திடீரென ஐ.டி., வேலையை விட்டு விட்ட தம்பதி, சுய தொழில் அதாவது, தங்களின் தோட்டத்தில் சாக்லேட் பேக்டரி துவக்கினர். இங்கு கோகோ சாக்லேட் தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து, கோகோ கொட்டைகளை வறுக்கும் வாணலி, அடுப்பு, கிரைண்டர், தோல் நீக்கும் மெஷின், சாக்லேட் தயாரிக்கும் அச்சுகள் உட்பட, தேவையான சாதனங்கள் வாங்கினர்.
நிரந்தரமான மின்சாரம் வேண்டும் என்பதால், ஜெனரேட்டர் மற்றும் சோலார் மின்சார வசதியும் செய்து கொண்டனர். இவர்களின் தோட்டத்திலேயே கோகோ விளைகிறது. இதை பயன்படுத்தி சாக்லேட் தயாரிக்கின்றனர்.
குறுகிய காலத்தில், சாக்லேட் பேக்டரியை லாபத்துக்கு கொண்டு வந்துள்ளனர். மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. சாக்லேட் தயாரிக்க வித விதமான ரசாயனங்களை, தம்பதி பயன்படுத்துவது இல்லை.
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இணையதளம் மூலம் சாக்லேட் எப்படி தயாரிப்பது என, தகவல் சேகரித்து அதன்படி தயாரிக்கின்றனர். இவர்களின் சாக்லேட்களுக்கு, நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது.
பல்வேறு மாநிலங்களுக்கு, இந்த பேக்டரியில் இருந்து, சாக்லேட் அனுப்பப்படுகிறது. சிறார்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். வரும் நாட்களில் வெளிநாடுகளுக்கும் சாக்லேட் ஏற்றுமதி செய்வது, தம்பதியின் குறிக்கோளாகும். கிராமத்தில் பேக்டரி திறந்ததால், தொழிலாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

