UPDATED : மார் 29, 2025 12:00 AM
ADDED : மார் 29, 2025 11:26 AM

கோவை:
ஏ.ஐ., அண்ட் பிக் டேட்டா, நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட, 10 படிப்புகள், வரும் 2030க்குள் வேகமாக வளர்ச்சியடையும் என கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியின், ஏரோநாட்டிக்கல் துறை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தெரிவித்தார்.
அவர் பேசியதாவது:
வளர்ந்து வரும் பொறியியல் நிறுவனங்களில், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை, குறிப்பிட்ட ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்கள், பல்துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கல்லுாரிகளில் பாடப் புத்தகங்களை படித்து, வேலைக்கு சென்ற பின், திறன்களை வெளிப்படுத்துவது என்ற வழக்கமான முறை பின்பற்றப்படுவதில்லை.
இதற்கு, மாறாக படிக்கும் போதே மாணவர்கள், புராஜக்ட் வாயிலாக, தொழில்நுட்பங்கள் குறித்து, விரிவாகக் கற்று, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சூழல் உள்ளது.
அதன்படி, வளர்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் அல்லது தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்னைகளை, 'யேக்கத்தான்' என்ற பெயரில் பட்டியலிட்டு, அவற்றை வெளியிடுகின்றன.
இந்த முறையில் மாணவர்கள், நிறுவனங்களின் பிரச்னைகளை, பிராஜக்ட் ஆக தேர்வு செய்து, அது குறித்த தகவல்களை கற்று, பின் தீர்வு காணும் சூழல் அதிகரித்துள்ளது. இதையே, தற்போது நிறுவனங்களும் எதிர்பாரக்கின்றன.
அதேபோல், மாணவர்கள் திறன் சார்ந்த சான்றிதழ் படிப்பை நிறைவுச் செய்துள்ளனரா என, நிறுவனங்கள் பெரிதும் எதிர்பார்கின்றன.
எனவே, மாணவர்கள் துறை சார்ந்த அறிவு மட்டுமின்றி, திறன் சார்ந்த அறிவையும் வளர்ப்பது அவசியம். அதன்படி, ஏ.ஐ., அண்ட் பிக் டேட்டா, நெட்வொர்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு, டெக்னாலஜிக்கல் அறிவு திறன் உள்ளிட்ட, 10 திறன் சார்ந்த படிப்புகள், 2030ம் ஆண்டிற்குள் வேகமாக வளர்ச்சியடையும் என, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
இவற்றை மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து படிப்பதால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறலாம்.
ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறையை பொறுத்தவரை, உற்பத்தி, ஹெல்த் கேர் ரோபோட்டிக்ஸ், தளவாடங்கள், ஏ.ஐ., பொறியாளர் உள்ளிட்ட பல்துறைகளில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற இயலும்.
எனவே, பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், குறிப்பாக ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறையை தேர்வு செய்வோர், பல்வேறு திறன்களை வளர்த்து கொள்வது அவசியம்.
அதேபோல், புராஜக்ட் வழி கற்றலில், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தயாரிப்பு முடிவுகளை, மாணவர்கள் வெளிப்படுத்துவது அவசியம்.
இவ்வாறு செய்வதன் வாயிலாக, சிறந்த நிறுனங்களில் உயர்ந்த பதவியை பெற முடியும்.
இவ்வாறு சந்திரமோகன் பேசினார்.