UPDATED : நவ 11, 2025 07:48 AM
ADDED : நவ 11, 2025 07:50 AM

மதுரை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மதுரை மாவட்டத்தில் வாகன பிரசார இயக்கத்தை துவக்கினர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர் அமைப்புகளின் இணைந்த செயல் குழு (ஜாக்டோ ஜியோ) அமைப்பினர் தங்கள் கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 1.4.2003க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் மாநில ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உட்பட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பிரசார இயக்கம் நவ.14 வரை நடக்கிறது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், சங்கர் துவக்கி வைத்தனர். அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாகனம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தும். நவ.18ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம், 2026 பிப்ரவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் உட்பட தொடர் போராட்டங்கள் குறித்தும் பேச உள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்கியராஜ், தமிழ், கோபி, முகைதீன், ராம்குமார், நீதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

