ஜனவரி தமிழ் மொழி மாதம் அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
ஜனவரி தமிழ் மொழி மாதம் அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
UPDATED : ஜன 19, 2025 12:00 AM
ADDED : ஜன 19, 2025 08:52 AM

வாஷிங்டன்:
ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக்கோரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 15 எம்.பி.,க்கள் அமெரிக்க பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக்கோரி, அந்த நாட்டு பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி., ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 எம்.பி.,க்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை போற்றும் வகையில் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள், கலாசாரங்கள், கருத்துக்கள், மரபுகளின் இடம். இந்தத் தீர்மானம் அமெரிக்காவில் வாழும் 3,50,000-க்கும் அதிகமான தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து, அமெரிக்கவாழ் இந்தியர்களான ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீதானேதர், பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோரும், சில அமெரிக்க எம்.பி.,க்களும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.