பள்ளிகளில் ஆபத்தான கட்டடங்கள் கணக்கெடுத்து இடிக்க வேண்டும் பி.இ.ஓ.,க்களுக்கு இணை இயக்குநர் உத்தரவு
பள்ளிகளில் ஆபத்தான கட்டடங்கள் கணக்கெடுத்து இடிக்க வேண்டும் பி.இ.ஓ.,க்களுக்கு இணை இயக்குநர் உத்தரவு
UPDATED : அக் 06, 2025 07:38 AM
ADDED : அக் 06, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
'அரசு பள்ளிகளில் பயன்படுத்த முடியாத ஆபத்தான கட்டடங்களை கணக்கெடுத்து அவற்றை இடிக்கும் பணிகளை தீவிரப்படுத்துங்கள்' என வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு (பி.இ.ஓ.,க்கள்) தொடக்கக் கல்வி இணை இயக்குநர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்ட பி.இ.ஓ.,க்களுக்கான ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது.
இணை இயக்குநர் சுவாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
தற்போது மழைக்காலம் என்பதால் அரசு பள்ளிகளில் பயன்படுத்தாத ஆபத்தான வகுப்பறைகள் இருந்தால் அவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இடிக்கும் பணிகளை பி.இ.ஓ.,க்கள் தீவிரப்படுத்த வேண்டும். 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 'திறன்' திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடம் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
காலை உணவு திட்டத்தை பி.இ.ஓ.,க்கள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். என்.எம்.எம்.எஸ்., தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஏ.ஐ., மூலம் கற்பித்தல் பணிகள், வாசிப்பு குறித்து நுாறு நாள் சேலஞ்ச் கண்காணிக்க வேண்டும். ஓய்வூதியம் பலன்கள் வழங்குவதில் எவ்வகையிலும் தாமதிக்க கூடாது என்றார். 'திறன்' திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பி.இ.ஓ.,க்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.