நீதித்துறை தொடர்பான சர்ச்சை பாடம்: உத்தரவில் மாற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட்
நீதித்துறை தொடர்பான சர்ச்சை பாடம்: உத்தரவில் மாற்றம் செய்தது சுப்ரீம் கோர்ட்
UPDATED : மே 23, 2026 01:57 PM
ADDED : மே 23, 2026 01:59 PM

புதுடில்லி:
என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தில் நீதித்துறை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரிக்க உதவிய மூன்று கல்வியாளர்களுக்கு எதிரான உத்தரவில் உச்சநீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது.
விசாரணை
நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பாடத்திட்டங்களை என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில், 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற, நீதித்துறையில் பல்வேறு மட்டங்களில் நிலவும் ஊழல் குறித்த பாடப்பிரிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, மன்னிப்பு கோரிய என்.சி.இ.ஆர்.டி., சர்ச்சைக்குரிய பாடத்தை திரும்பப் பெற்றது.
இந்த வழக்கில், கடந்த மார்ச் 11ல், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரித்த மூன்று கல்வியாளர்களான பேராசிரியர் மைக்கேல் டானினோ, சுபர்ணா திவாகம், அலோக் பிரசன்ன குமார் ஆகியோர், 8ம் வகுப்பு மாணவர்களிடம் இந்திய நீதித்துறை குறித்து ஒரு எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கும் நோக்கில், உண்மைகளை வேண்டுமென்றே திரித்து கூறியுள்ளனர்.
மனு தாக்கல்
இவர்கள், நாடு முழுதும் எந்தவொரு கல்விப் பணியிலும் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, 'பாட உள்ளடக்கத்தை வரைவு செய்வதில் எந்தவொரு தனிநபருக்கும், தனிப்பட்ட அதிகாரம் இல்லை. இது ஒரு கூட்டு செயல்முறை' என, தங்கள் தரப்பை விளக்கி, மூன்று கல்வியாளர்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மார்ச் 11ல் பிறப்பித்த உத்தரவில் சிறிய மாற்றம் செய்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட மூன்று பேராசிரியர்களை கல்விப் பணியில் பயன்படுத்திக் கொள்வதா வேண்டாமா என்பதை, மத்திய - மாநில அரசுகள், அரசு நிதி உதவி பெறும் பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முடிவுக்கே விடுவதாக உத்தரவிட்டுள்ளது.
