கலைத்திருவிழா தந்த புதிய மேடை; திறமையால் மிளிர்ந்த மாணவர்கள்
கலைத்திருவிழா தந்த புதிய மேடை; திறமையால் மிளிர்ந்த மாணவர்கள்
UPDATED : ஆக 25, 2026 09:34 PM
ADDED : ஆக 25, 2026 09:35 PM
திருப்பூர்:
வகுப்பறையில் மதிப்பெண்களுக்காக ஓடும் மாணவர்கள், நேற்று மேடையில் தங்கள் திறமையை நிரூபிக்க ஒன்று கூடினர். ஓவியம், இசை, நடனம், நாடகம் என பல வண்ணங்களில், திருப்பூர் மாவட்ட கலைத்திருவிழா களைகட்டியது.
ஜெய்வாபாய் பள்ளியில் நேற்று துவங்கிய விழாவில், மாவட்டம் முழுவதும் இருந்து 957 மாணவ, மாணவியர், பொறுப்பு ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் வரவேற்றார்; மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், “மேடையேறி திறமையை வெளிப்படுத்த அச்சத்தை விட வேண்டும். கடந்த ஆண்டு, ஐந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட 41 பேர் மாநில கலைத்திருவிழாவில் பங்கேற்று திருப்பூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தனர். இந்த ஆண்டும் அதிகமானோர் மாநில போட்டிக்கு சென்று வெற்றி பெற வேண்டும்.
பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதுவது ஒருபுறம்; ஒவ்வொருவருக்கும் தனித்திறனும் அவசியம். ஒரே நாளில் திறமையை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தனித்திறன்களே எதிர்கால வேலைவாய்ப்புக்கும் துணையாக இருக்கும். உங்கள் திறனை காட்டுங்கள்; வென்று காட்டுங்கள்,” என்றார்.
கவின் கலை, நுண்கலை, ஓவியம், ரங்கோலி, சிற்பம், இசை, வாய்ப்பாட்டு, வில்லுப்பாட்டு, பறை, மிருதங்கம், நாதஸ்வரம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசித்தல், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், நாடகம், பாவனை நடிப்பு, பலகுரல் பேச்சு, பொம்மலாட்டம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மணிமாறன், கல்வி நிலைக்குழு தலைவர் திவாகரன், தொடக்க கல்வி அலுவலர்கள் சித்ரா (திருப்பூர்), அருள்ஜோதி (தாராபுரம்), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, நஞ்சப்பா பள்ளியில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன.
பாடப்புத்தகத்தில் பதில் தேடும் மாணவர்கள், நேற்று தங்களுக்குள் இருந்த திறமைக்கான அடையாளத்தை தேடி மேடையேறினர்; சிலருக்கு அது ஒரு போட்டியாக இருந்திருக்கலாம்... பலருக்கு, தங்களால் முடியும் என்ற நம்பிக்கையின் முதல் மேடையாகவும் அமைந்தது.
மேடையேறின கனவுகள்; தயக்கம் தாண்டின திறமைகள்!
அச்சத்தை மறந்து மேடையேறினர்; தயக்கத்தைத் தள்ளிவிட்டு, திறமையை வெளிப்படுத்தினர். வகுப்பறையில் அமைதியாக இருந்த முகங்களுக்குள் இவ்வளவு திறமைகள் ஒளிந்திருக்குமா என வியக்க வைத்தனர். ஒவ்வொரு முயற்சியிலும் ஒரு கனவு தெரிந்தது; ஒவ்வொரு முகத்திலும் தன்னம்பிக்கை மலர்ந்தது. மாணவ, மாணவியரின் இந்த உற்சாகமே கலைத்திருவிழாவுக்கு தனி வண்ணம் சேர்த்தது.
ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த மாவட்ட கலைத்திருவிழாவில், மாணவ, மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
