கருணாநிதி 'பொற்கிழி' விருது: தேர்வானோர் விபரம் வெளியீடு
கருணாநிதி 'பொற்கிழி' விருது: தேர்வானோர் விபரம் வெளியீடு
UPDATED : டிச 23, 2025 07:01 AM
ADDED : டிச 23, 2025 07:02 AM
சென்னை:
சென்னை புத்தக கண்காட்சியை, ஜன.,8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். கருணாநிதி பெயரிலான 'பொற்கிழி' விருது, ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான 'பபாசி' சார்பில், 49வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜன., 8ம் தேதி துவங்கி, 21 வரை, 14 நாட்கள் நடக்க உள்ளது.
தினசரி காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும். கடந்த காலங்களில் இருந்தது போல் இல்லாமல், இம்முறை அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
பபாசி தலைவர் சண்முகம் கூறியதாவது:
ஆண்டுதோறும், உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில், சிறந்த எழுத்தாளர்களுக்கு, கருணாநிதி பெயரிலான 'பொற்கிழி' விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2026ம் ஆண்டில் இவ்விருதை பெற, கவிதை - கவிஞர் சுகுமாரன், சிறுகதை -ஆதவன் தீட்சண்யா, நாவல் -இரா.முருகன், உரைநடை - பேராசியர் பாரதிபுத்திரன், நாடகம் - கருணா பிரசாத், மொழிபெயர்ப்பு - வ.கீதா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு, விருதுடன் தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
கண்காட்சியில், உலக புகழ்பெற்ற, பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, சைமன் அண்ட் ஸ்கஸ்டர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

