தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த முத்துக்கள்

மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த முத்துக்கள்

மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த முத்துக்கள்


UPDATED : மே 10, 2011 12:00 AM

ADDED : மே 11, 2011 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2011 12:00 AM ADDED : மே 11, 2011 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கே. ரேகா - (முதல் இடம்)
சாதனை படைத்தவர்களுக்கு சேவை செய்ய விருப்பம். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பெரும்பாலானோர் டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யவே விரும்புவதாக தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர்.


ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான ரேகா ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.


மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்  - 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.


எஸ். வேல்முருகன் - (இரண்டாம் இடம்)
"சக மாணவர்கள் சந்தேகங்கள் கேட்டபோது, தயக்கம் இல்லாமல் சொல்லிக் கொடுத்தேன்' என, பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற, கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர் வேல்முருகன் கூறினார்.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் வேல்முருகன், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். கள்ளக்குறிச்சியில் வசிக்கும் இவரது தந்தை செல்வராஜ், கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியில் பணிபுரிகிறார். தாய் ராஜகுமாரி. மாணவர் வேல்முருகன் பெற்ற மதிப்பெண்கள் விவரம், பாட வாரியாக வருமாறு: தமிழ் 194, ஆங்கிலம்194, இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களில் தலா 200 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 199 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண், 1,187.


மாணவர் வேல்முருகன் கூறியதாவது: தினமும் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு நேரங்களில் 7.30 மணி முதல் தூக்கம் வரும் வரை படிப்பேன். எனது பள்ளி முதல்வர் ராமசாமி, பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், எனது சகோதர்கள் சுந்தரவடிவு, சுரேஷ், நண்பர்கள் அதிகம் ஊக்கமளித்தனர். அனைத்து பாடங்களையும் விரும்பி படித்தேன். கணக்கு பாடத்தை அதிகம் விரும்பி படித்தேன்.


ஆசிரியர் சரவணன், என் படிப்பிற்கு அதிகம் ஊக்கம் கொடுத்தார். பத்தாம் வகுப்பில், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என படித்தேன். அப்போது 457 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றதால், என் பள்ளி நிர்வாகம் சார்பில், இலவச கட்டணத்தில் படித்தேன். படிக்கும் போது சக மாணவர்கள் சந்தேகம் கேட்டபோது, தயக்கம் இல்லாமல் சொல்லிக் கொடுத்தேன். பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் அனைத்து பாடங்களையும் அன்றே படிப்பேன். டாக்டராக வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு மாணவர் வேல்முருகன் கூறினார்.


டி. வித்யா சகுந்தலா - (மூன்றாம் இடம்)
"நான் மாநில ரேங்க் பெறுவதற்காக, வீட்டில், கேபிள், "டிவி' இணைப்பையே என் பெற்றோர் நிறுத்திவிட்டனர்,'' என, மாநில மூன்றாம் இடம் பிடித்த மாணவி வித்யா சகுந்தலா தெரிவித்தார்.


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி வித்யா சகுந்தலா, 1,186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். திருநெல்வேலி ஜங்ஷன் உடையார்பட்டியில் வசிக்கும் இவரது தந்தை தனுஷ்கோடி, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர். தாயார் விஜய ஜானகி, நெல்லை ஸ்காட் பாலிடெக்னிக்கில் பேராசிரியர். வித்யா சகுந்தலா, தமிழ் 195, ஆங்கிலம் 193, இயற்பியல், வேதியியல், உயிரியியலில் தலா 200, கணக்கில் 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


அவர் கூறியதாவது: மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என்ற எதிர்பார்ப்புடன் படித்தேன். இரவு 11.30 மணிவரையும், அதிகாலையிலும் படிப்பேன். டியூஷனுக்கு சென்றதில்லை. எங்கள் வீட்டில், கேபிள், "டிவி' இணைப்பை துண்டித்து, பெற்றோர் "டிவி' பார்ப்பதை தவிர்த்தனர். எங்கள் பள்ளியில் ஒவ்வொரு பாடத்திற்கும் சிறப்பான பயிற்சியளித்தனர். இவ்வாறு வித்யா சகுந்தலா கூறினார்.


என். ரகுநாத் - (மூன்றாம் இடம்)
இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால், வெற்றி நிச்சயம்,'' என மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவர் ரகுநாத் தெரிவித்தார்.


தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரகுநாத், 1,186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களும், கணக்குப் பதிவியல்- 199, தமிழ்- 196, ஆங்கிலம்-191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை நாகேஸ்வரன், அங்குள்ள மெர்க்கன்டைல் வங்கியில் மேலாளராக உள்ளார். தாய் அனுசுயா, தம்பி ரோகித் ஆகியோர் உள்ளனர்.


வெற்றி குறித்து ரகுநாத் கூறியதாவது: 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து படித்தேன். பள்ளியில் ஆசிரியர் நடத்தும்போதே கவனமாக கேட்டு புரிந்துகொள்வேன். அன்று நடத்திய பாடங்களை வீட்டிற்கு வந்து, அன்றே படித்து முடித்து விடுவேன். அப்பா எதற்காகவும் கண்டிக்க மாட்டார். அவ்வப்போது சில ஆலோசனைகளை வழங்கினார். நான் எதற்கும் டென்ஷன் ஆகாமல் இருப்பேன். அம்மா எனக்கு தியானம் சொல்லி கொடுத்தார். பள்ளியில் ஆசிரியர்கள், இரவு 8 மணி வரை கூட சிறப்பு வகுப்புகள் நடத்தி படிக்க வைத்தனர். இவ்வாறு ரகுநாத் கூறினார்.


பி. சிந்துகவி - (மூன்றாம் இடம்)
மருத்துவ படிப்பில், இருதய அறுவை சிகிச்சை நிபுணராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வது என் குறிக்கோள்,'' என, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த, நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவி தெரிவித்தார்.


நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சிந்துகவி, 1,186 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-196, ஆங்கிலம்-190, இயற்பியல்-200, வேதியியல்-200, உயிரியல்-200, கணிதம்-200 என, மொத்தம், 1,186 பெற்றார். மாணவி சிந்துகவி, கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆழியார் நகரைச் சேர்ந்தவர். அவரது தந்தை பஞ்சலிங்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். தாய் லோகநாயகி குடும்பத் தலைவி.


மாநில அளவில் தேர்ச்சி பற்றி மாணவி சிந்துகவி தெரிவித்ததாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவேன் என எதிர்பார்த்தேன். கடவுள் அருளால் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தேன். காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலையில் பள்ளி முடிந்த பின்பும் படிப்பேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்பது என் குறிக்கோள். அத்துறையில், "கார்டியாலஜி' (இருதய அறுவை சிகிச்சை) படித்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வது என் லட்சியம். விடுதியில் தங்கி படிப்பதால், "டிவி' பார்க்க முடியாது. வீட்டில் இருக்கும் போது, "டிவி' அதிகம் பார்க்க மாட்டேன். நாளிதழ்கள் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பி.எஸ்.ரேகா - (மூன்றாம் இடம்)
மாணவி பி.எஸ்.ரேகா கூறியதாவது: என்னுடைய வெற்றிக்கு முழுக்க முழுக்க ஆசிரியர்களும், பெற்றோரும் தான் காரணம். எங்கள் பள்ளியில் யார் நல்ல மதிப்பெண் எடுத்தாலும், உடனே பள்ளி நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்காகம் அளிப்பர். அந்த உற்சாகமும், பெற்றோரின் உறுதுணையாலும், என்னால் மாநிலத்தில் மூன்றாவது இடம் பெறமுடிந்தது.


ஒவ்வொரு நாளும், வகுப்பறையில் நடத்தும் பாடங்களை திட்டமிட்டு படித்து, வீட்டிற்கு வந்ததும் எழுதி எழுதி பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு வெளியாகும்போது, வெற்றி பெற்றவர்களை பார்த்து, எனக்குள், நானும் அவர்களை போல் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அதனால், பிளஸ் 2 வகுப்பில் கண்டிப்பாக, மாநில ரேங்க் பெற வேண்டும் என நினைத்து படித்தேன்.


ஐ.ஏ.எஸ்., படிப்பது தான் என் ஆசை. கலெக்டராக பணிபுரிந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என, ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us