UPDATED : மே 11, 2011 12:00 AM
ADDED : மே 11, 2011 12:10 PM
ராமநாதபும்: மாவட்டம் தோறும் நடந்துவரும் இருப்பிடப் பயிற்சி முகாமில் பயன்பெறுவதற்கு பதிலாக, பல்வேறு இம்சைகளை பள்ளிக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கோடை விடுமுறையில் பல்வேறு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வரிசையில் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில், இருப்பிடப் பயிற்சி முகாம் கடந்த மே 2ல் தொடங்கியது. அனைத்து விளையாட்டிற்கும் 15 நாட்கள் நடக்கும் முகாமில், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாவட்ட தலைநகரங்களில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் மாணவர்கள் முகாமிட்டுள்ளனர்.
காலை 6 முதல் 8, மாலை 4 முதல் 6 மணி வரை பயிற்சி நடக்கிறது. எஞ்சிய நேரத்தில் பள்ளி குழந்தைகளை யாரும் கண்காணிப்பதில்லை. காலை 9-4 மணி வரை பயிற்சியாளர், அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், விளையாட்டு உபகரணங்களும் மறுக்கப்படுவதால் கிடைத்ததை வைத்து விளையாடி வருகின்றனர்.
வாட்டி வரும் வெயிலின் கொடுமையால் அறையில் தங்க முடியாமல் பகலில் மரத்தடி நிழல் தேடி அலைகின்றனர். திறமையை வளர்க்க வந்த இடத்தில், கிடைத்த நேரத்தை வீணடிக்க மனமில்லாத சிறுவர்கள் சிலர், நோட்டு புத்தகத்தை வைத்து சிறகு பந்து, ஹாக்கி மைதானத்தில் கால்பந்து விளையாடி நேரத்தை கடத்தி வருகின்றனர். உணவு, உறைவிடம், விளையாட்டு அனைத்துக்கும் ஏற்பாடு செய்தவர்கள், பகலில் படிப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும், இம்சைகளையும் தவிர்த்திருக்கலாம்.
