தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எளிதான நடைமுறை தேவை - சிந்திக்குமா தேர்வுத்துறை

எளிதான நடைமுறை தேவை - சிந்திக்குமா தேர்வுத்துறை

எளிதான நடைமுறை தேவை - சிந்திக்குமா தேர்வுத்துறை


UPDATED : மே 12, 2011 12:00 AM

ADDED : மே 12, 2011 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2011 12:00 AM ADDED : மே 12, 2011 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: உடனடித்தேர்வு விண்ணப்பங்கள், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பங்கள் ஆகியவற்றை வாங்குவதிலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைப்பதிலும், எளிதான நடைமுறைகளை கடைபிடிக்காததால், மாணவர்கள் பெரும் அலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.


அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்தவர்களுக்கு உடனடித் தேர்வு, விடைத்தாள் நகல், மறு கூட்டல் ஆகியவற்றுக்கு பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
இதற்கான நடைமுறையை எளிதாக்கி, மாணவர்கள் சிரமப்படாமல் விண்ணப்பங்களை வாங்கவோ, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கவோ, தேர்வுத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.


மாறாக, விண்ணப்ப வினியோகம் மற்றும் பூர்த்திசெய்த விண்ணப்பங்களை வாங்குதல் ஆகியவற்றில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான நடைமுறைகளை கடைபிடிப்பதால், மாணவர்கள் பெரும் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் மட்டும் விண்ணப்பங்களை வாங்கி, அங்கேயே ஒப்படைக்க வேண்டும் என்று ஒருமுறை அறிவிப்பதும், அதன்பின், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று, அங்கேயே வழங்க வேண்டும் என்று அறிவிப்பதும், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.


கடந்த ஒன்பதாம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும் நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள், விண்ணப்பங்கள் விற்பனை, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வாங்குதல் ஆகியவற்றை, கூடுதல் பணிச்சுமையாக கருதுகின்றனர். இதனால், இந்தப் பணிகளில் ஈடுபாடு காட்டாமல் மாணவர்களிடம் எரிந்து விழுகின்ற நிலை இருக்கிறது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், விண்ணப்பங்களை விற்பனை செய்யும் பணியில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி நியமிக்கின்றனர்.


தற்போது, கோடை விடுமுறை அமலில் உள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களிலும், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி விண்ணப்ப பணிகளுக்காக அழைத்துள்ளனர். இதனால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில், பல ஆண்டுகளாக, டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு திடீரென அதை நிறுத்திவிட்டனர். இதற்கான காரணத்தை தேர்வுத்துறை தெரிவிக்கவில்லை.


இதை அறியாமல், கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான மாணவர்கள், டி.பி.ஐ., வளாகத்திற்கு வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர். விண்ணப்பங்களை வழங்குவதற்கென, தனி கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் மாணவர்கள் வசதிக்காக, உணவருந்தும் கூடமும் ஏற்படுத்தப்பட்டது. இவ்வளவு செய்தபின், திடீரென, டி.பி.ஐ -ல் விண்ணப்பம் வழங்கப்பட மாட்டாது என, தேர்வுத்துறை அறிவித்தது ஏன்? என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


சென்னையில், விண்ணப்பங்கள் வழங்கப்படும் ஐந்து இடங்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. விண்ணப்பம் வழங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறவும் மிக குறுகிய நாட்களே அவகாசம் தரப்படுகிறது. கூட்ட நெரிசலுக்கு இது ஒரு முக்கியக் காரணம். விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஆறு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இதில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பம் வழங்குவதில்லை. மீதமுள்ள நான்கு நாட்களில் எப்படி விண்ணப்பிக்க முடியும் என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த பிரச்னைகள் தீர, அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்குரிய கட்டணத்திற்கான தொகையை, தேர்வுத்துறை இயக்குனர் பெயரில் டி.டி -யாக எடுத்துச் சென்று கொடுத்தால் மட்டுமே, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வழங்கப்படும் மையத்திற்கு சென்றபின், டி.டி. எடுப்பது சிரமமாக இருக்கும். அருகில் உள்ள ஒருசில வங்கிகளில் அதிக கூட்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள வங்கியில் டி.டி. எடுத்தபின், சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்றால் அலைச்சல் இன்றி விண்ணப்பம் வாங்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us