விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் முறைகளில் மாற்றம் வருமா?
விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் முறைகளில் மாற்றம் வருமா?
UPDATED : மே 12, 2011 12:00 AM
ADDED : மே 12, 2011 11:25 AM
மதுரை: பிளஸ் 2 விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி பெறுவதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானவுடன், விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதியை பெற மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கணிதம், அறிவியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், கூடுதல் மதிப்பெண் பெற ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம், அதற்கான செலவு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி பெற, மொழிப்பாடங்களுக்கு ரூ. 550, பிற பாடங்களுக்கு ரூ. 275 செலுத்த வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சம் 50 பக்கங்கள் எழுதியிருந்தாலோ, அதை பிரதியெடுக்க 25 ரூபாய் செலவாகலாம். எனவே பிரதியெடுக்க, தபாலில் அனுப்ப என ரூ. 100 அல்லது ரூ.150 வரை வசூலிக்கலாம். ஆனால் ரூ.275 என்பது அதிகம்.
மாணவர்களா பொறுப்பு?
விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதி பெற்றதும், மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டால், அதற்கு மாணவர்கள் எப்படி பொறுப்பாவர்? ஆனால், அதற்கும் கட்டணம் செலுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுடன், செலவையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யும்போது, கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டிய நிலையில், மாணவருக்கு கட்டணத்தை திருப்பித் தரலாம். மாணவர்களின் மனஉளைச்சல், செலவை தவிர்க்க முடியும்.
விரைவுபடுத்த வேண்டும்:
இதன் பின்னும், பிரச்னை உள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர். விடைத்தாள் ஜெராக்ஸ் பிரதிக்கு மே 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் ஜெராக்ஸ் பிரதி பெற்று மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் மதிப்பெண் வழங்க வேண்டிய நிலையில், அதற்கு காலதாமதமாகிறது. அதற்குள் தொழிற்கல்வி படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்கிவிடும். ஏனெனில் தொழிற்கல்வி படிப்புக்கு மே 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின், ஓரிரு வாரத்தில் கவுன்சிலிங் துவங்கும். அந்நிலையில், மறுமதிப்பீட்டில் பெற்ற மதிப்பெண் மூலம், அம்மாணவர் முதற்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க வாய்ப்பின்றி போகிறது. இதனால், தான் நினைத்த கல்லூரியில், நினைத்த படிப்பை பெறும் வாய்ப்பும் நழுவுகிறது. இதற்கு அம்மாணவர் எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில் பாதிப்படைவதாக கருதுகின்றனர்.
சிறப்பாக விடையெழுதியும் மதிப்பெண் குறைந்தவர்களே பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர். ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசம் வரலாம் என கருதுவோர் விண்ணப்பிப்பதில்லை. இவ்வகை மாணவர்கள் பல ஆயிரம் பேர் இருப்பர். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கும் தங்கள் விடைத்தாள் மதிப்பீட்டை அறிய வாய்ப்பு அளிக்கலாம். சில வங்கித் தேர்வுகளில் விடைத்தாள், "கார்பன் ஷீட்" உதவியுடன் நகலெடுக்கும் வகையில் உள்ளது.
இதுபோன்ற விடைத்தாள்களை பயன்படுத்த வேண்டும். தேர்வெழுதி முடிந்ததும் நகலை மாணவர்களிடம் அளித்துவிட வேண்டும். தேர்வு முடிவில் சந்தேகப்படும் மாணவர்கள், தாம் பெற்ற நகல் விடைத்தாளை ஆசிரியர்கள் மூலம் மதிப்பீடு செய்து, அதன் பின் விண்ணப்பிக்கலாம் என்றும் பெற்றோர் யோசனை தெரிவிக்கின்றனர்.
