UPDATED : மே 12, 2011 12:00 AM
ADDED : மே 12, 2011 12:06 PM
பிளஸ் 2 உடனடி தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் 13ம் தேதி வரை வினியோகிக்கப்படும். தனித் தேர்வாளர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. தேர்வில், மூன்று அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி முதல் மறுத்தேர்வு நடக்கவுள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள், நேரடியாக பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளியிலேயே ஒப்படைக்கலாம்.
தனித்தேர்வாளர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மண்டல துணை இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்கம், கோவை என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ, நேரிலோ ஒப்படைக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வுக்கு 50 ரூபாயும், மதிப்பெண் சான்றிதழுக்காக 20 ரூபாயும், இதர கட்டணமாக 15 ரூபாயும் சேர்த்து பாடம் ஒன்றுக்கு 85 ரூபாயும், இரண்டு பாடங்களுக்கு 135 ரூபாயும், மூன்று பாடங்களுக்கு 185 ரூபாயும் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு கட்டணத்தை ரசீதில் பூர்த்தி செய்து கட்டணத்தை பள்ளியிலேயே செலுத்த வேண்டும். தனித்தேர்வாளர்கள் விண்ணப்பத்துடன் இணைத்துள்ள கருவூலசீட்டில் பூர்த்தி செய்து கட்ட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 13ம் தேதி வரை பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்படும். இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக பள்ளியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித்தேர்வாளர்களுக்கு, வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
