UPDATED : மே 13, 2011 12:00 AM
ADDED : மே 13, 2011 12:24 PM
உடுமலை: கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்காமல், உடுமலை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சமூக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் தேர்வு முடிந்து இரண்டு மாதங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் புத்தகத்தை சுமந்த மாணவர்களுக்கு இரண்டு மாதம் கிடைத்த ஓய்வை சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி பொழுதை போக்கி வருகின்றனர். ஆனால், உடுமலை அருகே கிராமப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் சமூக பணியில் களமிறங்கியுள்ளனர். உடுமலை அருகேயுள்ளது வாளவாடி ஊராட்சி. இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் குழுவாக இணைந்து, "பசுமை புரட்சி" என்ற அமைப்பை ஏற்படுத்தி சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பசுமை புரட்சியை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், "பணிகளை துவக்கியபோது, சில மாணவர்கள் தானாக முன்வந்து எங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டினர். முதற்கட்டமாக வாளவாடி மற்றும் சுற்றுப்பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அடுத்ததாக பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படும் பஸ் ஸ்டாப்பை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பஸ் ஸ்டாப்பின் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. பயணிகள் உட்காரும் வகையில், பழுதடைந்த இருக்கைகள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, பஸ்ஸ்டாப் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. கிராமப்புறத்தில், சுகாதாரத்தை பாதுகாப்பதால் என்ன பயன் என்பதை விளக்கும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
மாணவர்கள் சிறுவயதிலேயே தங்களால் இயன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை பலரும் பாராட்டுகின்றனர்.
