தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் கேள்விகளுக்கு ஜெயபிரகாஷ் காந்தி பதில்

மாணவர் கேள்விகளுக்கு ஜெயபிரகாஷ் காந்தி பதில்

மாணவர் கேள்விகளுக்கு ஜெயபிரகாஷ் காந்தி பதில்


UPDATED : மே 17, 2011 12:00 AM

ADDED : மே 17, 2011 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2011 12:00 AM ADDED : மே 17, 2011 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் கவுன்சிலிங் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்த மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கல்வி மலர் இணையதள அரங்கில் இருந்து நேற்று முன்தினம் ஆலோசனை வழங்கினார். மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் ஆர்வமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவு பெற்றனர்.


அவற்றில் இருந்து சில கேள்வி - பதில்களின் தொகுப்பு


லட்சுமி, விழுப்புரம்: பிளஸ் 2 தேர்வில், எனது பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் 177.75. எனக்கு பொறியியல் ஐ.டி., படிக்க விருப்பம். அண்ணா பல்கலை கட்-ஆப் விவரங்களை அதன் இணையதளத்தில் பார்ப்பது சிரமமாக உள்ளது. நாங்கள் பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள். எனவே கட்-ஆப் விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது? சென்னை அண்ணா பல்கலை தவிர, பிற ஊர்களின் அண்ணா பல்கலைகளில் இடம் கிடைக்குமா? மேலும், பி.இ., படிப்பை தவிர வேறு நல்ல படிப்புகள் என்ன உள்ளன?


அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.annauniv.org) சென்றால், அதில் 3 இணைப்புகள் (லின்க்) இருக்கும். அதில் நீங்கள் எளிதாக தேடலாம். சென்னை தவிர்த்த பிற அண்ணா பல்கலைகளில், சிவில் மற்றும் மெக்கானிக் போன்ற பிரிவுகளில் தமிழ் மீடியம் கிடைக்க வாய்ப்புள்ளது. பி.இ., படிப்பு தவிர வேறு நல்ல படிப்புகள் நிறைய உள்ளன. எம்.சி.ஏ., பலவித எம்.எஸ்சி., படிப்புகள் மற்றும் இன்டெக்ரேட்டட் படிப்புகள் உள்ளன.


ஜெயராஜ், திருச்சி: பி.இ., பயோடெக்னாலஜி அல்லது பி.டெக்., பயோடெக்னாலஜி படித்தால் எதுபோன்ற வேலைவாய்ப்பு கிடைக்கும்? எந்தெந்த பாடங்களில் பி.டெக்., கட்-ஆப் பார்ப்பார்கள்? மதிப்பெண் குறைவாக இருந்தால் எதுபோன்ற கல்லூரிகள் கிடைக்கும்?


பி.இ., / பி.டெக்., பயோடெக்னாலஜி ஆகிய இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இது ஒரு ஆராய்ச்சி துறை. இந்த துறையில் அக்ரி உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இத்துறையை பொறுத்தமட்டில், ஒரு சரியான குறிக்கோளின்றி முன்னேறுவது கடினம். இத்துறை படிப்பில் எம்.டெக்., மற்றும் பி.எச்டி., போன்ற உயர் படிப்புகளை மேற்கொள்ளலாம். எந்த பிரிவை தேர்ந்தெடுத்து, அதில் ஈடுபடுவது என்று சரியான திட்டம் இல்லையெனில், இதில் வேலைவாய்ப்பை பெறுவது கடினம். தெளிவான திட்டம் இருந்தால் பிரச்னை இல்லை. பி.டெக். கட்-ஆப் மதிப்பிட, கணிதம் - இயற்பியல் - வேதியியல் போன்ற பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும். குறைவான மதிப்பெண்களுக்கு 2ம் மற்றும் 3ம் நிலை கல்லூரிகள் தான் கிடைக்கும்.


சுஸ்மிதா, திருப்பூர்: மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 191. இந்த மதிப்பெண்ணுக்கு எம்.பி.பி.எஸ்., கிடைக்குமா? மேலும் பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் 195. எனவே, பொறியியல் படிப்பில், பயோ மெடிக்கல், இ.சி.இ., மற்றும் இ.இ.இ., போன்ற படிப்புகளில் எதை படித்தால் பிற்காலத்தில் பயனுள்ளதாக அமையும்? நான் பி.சி., பிரிவை சேர்ந்தவள்.


மருத்துவ படிப்பை பொறுத்தவரை, உங்களுக்கு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) இடம் கிடைக்கும். சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரை, டாப் கல்லூரிகளிலேயே தாராளமாக பி.டி.எஸ்., இடம் கிடைக்கும். பொறியியல் படிப்பை பொறுத்தவரை, பயோமெடிக்கல் படிப்பானது குறைந்த கல்லூரிகளிலேயே உள்ளது. ஆனாலும் இது ஒரு நல்ல வாய்ப்புள்ள படிப்பு. கோவை ராமகிருஷ்ணா கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் இப்படிப்பு உள்ளது. இ.சி.இ., மற்றும் இ.இ.இ., போன்ற படிப்புகளும் நல்ல வாய்ப்புள்ள படிப்புகள் தான்.


ஜார்ஜ், சேலம்: நேச்சுரோபதி படிப்பை பற்றி சொல்லுங்களேன்? அதில் வேலைவாய்ப்பு எப்படி?


அது இந்திய மருத்துவம் சார்ந்த ஒரு பிரிவு. அதை மாற்று மருத்துவம் (ஆல்டர்நேடிவ் மெடிசின்) என்று அழைக்கலாம். இந்த படிப்பானது சுய வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது. வெளியில் வேலை தேட வேண்டியதில்லை. சுயமாகவே சம்பாதிக்கலாம்.


பிரியா, கோவை: எனது பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் 194.25; ஓ.சி., பிரிவு. கோவையை சுற்றி ஏதேனும் நல்ல கல்லூரிகளில் பொறியியல் இடம் கிடைக்குமா? பி.எஸ்சி., படித்து எம்.எஸ்சி., படிக்கலாமா அல்லது பி.டெக்., படிக்கலாமா?


கிருஷ்ணா, ராமகிருஷ்ணா மற்றும் பண்ணாரி அம்மன் போன்ற கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்கும். பி.எஸ்சி / எம்.எஸ்சி., அல்லது பி.டெக்., இவற்றில், பி.டெக்., சிறந்தது. ஏனெனில் பி.டெக்., படித்திருந்தால் மேல் படிப்பிற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எப்போதுமே, அதிக வாய்ப்புகள் உள்ள விஷயங்களை தேர்ந்தெடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.


ராஜசேகர், கோவை: எனது கட்-ஆப் மதிப்பெண் 171. எனக்கு ஐ.டி., படிக்க ஆசை. கோவையை சுற்றிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? பி.எஸ்சி., - ஐ.டி., நல்லதா அல்லது பி.டெக்., - ஐ.டி., நல்லதா?


கோவை, சேலம், நாமக்கல் பகுதிகளில் நிறைய கல்லூரிகள் உள்ளன. எனவே கண்டிப்பாக இடம் கிடைக்கும். பி.எஸ்சி., - ஐ.டி., படிப்பை விட, பி.டெக்., - ஐ.டி., நல்லது.


வெங்கடகிருஷ்ணன், திருவாரூர்: எனது கட்-ஆப் மதிப்பெண் 181.25. நாங்கள் பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள். எனக்கு ஏரோநாட்டிகல் படிக்க ஆசை. எந்த கல்லூரியில் படிக்கலாம்? சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?


இந்த மதிப்பெண்ணுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை கல்லூரிகளில் தான் இடம் கிடைக்கும். ஏரோ நாட்டிகல் துறையை பொறுத்தவரை வாய்ப்புகள் குறைவு. இந்த துறைக்கு நல்ல திறமையான ஆட்களே தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, நமது திறமைகளை வளர்த்து கொள்ள வாய்ப்பளிக்கும் கல்லூரியாக பார்த்து நாம் சேர வேண்டும். இளநிலையில் ஏரோநாட்டிகல் படிப்பதை விட, மெக்கானிக்கல் படித்துவிட்டு, முதுநிலை படிப்பில் ஏரோநாட்டிகல் துறையை தேர்ந்தெடுக்கலாம்.


செல்வி, மதுரை: எனது பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் 197. அண்ணா பல்கலையில் இடம் கிடைக்குமா? அங்கே கற்பித்தல் சரியாக இல்லை என்கிறார்களே?


இல்லவே இல்லை. அண்ணா பல்கலைக்கென்று எப்போதுமே கற்பித்தல் மற்றும் இன்ன பிற கல்வி வசதிகளில் சிறப்பான இடம் உண்டு. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம். உங்கள் மதிப்பெண்ணிற்கு, சென்னை அண்ணா பல்கலை கிடைப்பது கஷ்டம். வேண்டுமானால், மதுரையில், தியாகராஜா, எஸ்.எஸ்.என்., போன்ற கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு.


சுகன்யா, சென்னை: நான் தற்போது சிவில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படிக்கிறேன். இத்துறையில் முதுநிலை படிப்பை அமெரிக்காவில் படிக்க ஆசை. ஜி.ஆர்.இ., - டோபல் தேர்வெழுதி, 1,150 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கட்டுமான பொறியியல் துறையில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளதா?


இத்துறையில், கன்ஸ்ட்ரக்ஷன், வாட்டர் ரிசோர்ஸ், ஜியோ டெக்னாலஜி உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. அமெரிக்காவில் முதுநிலை படிப்பை மேற்கொள்வது எளிதல்ல. ஜி.ஆர்.இ., - டோபல் தேர்வின் புதிய பேட்டர்னை மீண்டும் எழுதவும். ஏனெனில், அந்த புதிய பேட்டர்னில் பலரும் மதிப்பெண் எடுக்க திணறுகின்றனர்.


மேலும், ஜி.ஆர்.இ., - டோபல் என்பது ஒரு "பெஞ்ச் மார்க்&' போன்றது தான். செமினார், ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆய்வுப் பணி போன்றவையே மேற்படிப்பிற்கு தேர்வாக மிகவும் முக்கியம். உங்களின் ஆய்வை ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேற்கொள்ள வேண்டும். நல்ல ஜி.ஆர்.இ., மதிப்பெண்ணும், இளநிலை பட்ட மதிப்பெண்ணும் இருந்தால் தான் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். கட்டுமான பொறியியல் துறையில் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன.


பிரேம்குமார், சிவகாசி: பிளஸ் 2 தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களே எடுத்துள்ளேன். என்னால் பொறியியல் படிக்க முடியுமா? எனக்கு வங்கியில் கல்விக்கடன் கிடைக்குமா?


கவலையே வேண்டாம். தாராளமாக படிக்கலாம். உங்களின் மதிப்பெண் ஒரு பிரச்னை இல்லை. வங்கியிலும், கல்விக்கடன் கிடைக்கும்.


முகம்மது அசாருதீன், மதுரை: எனது மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 197.25. நாங்கள் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட பிரிவை (பி.சி.எம்.,) சேர்ந்தவர்கள். எனக்கு மதுரை மற்றும் திருச்சி பகுதிகளிலுள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?


சென்றாண்டு பி.சி.எம்., பிரிவினருக்கு கட்-ஆப் மதிப்பெண் 194. எனவே, இந்தாண்டு உங்களுக்கு பிரச்னை இல்லை. உங்களுக்கு திருச்சி, தூத்துக்குடி மற்றும் தேனி பகுதி கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.


ஐஸ்வர்யா, கோவை: எனது மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் 198.25. நாங்கள் பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள். எனக்கு கோவை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா?


கோவையில் இடம் கிடைப்பது கடினம். ஏனெனில் தமிழகத்தில், சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி போன்றவை முதல்நிலை கல்லூரிகள் பட்டியலில் வருபவை. அவற்றில் போட்டி அதிகமாக இருக்கும்.


அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் மதுரை மருத்துவ கல்லூரி போன்றவற்றில் இடம் கிடைக்கும். மேலும் தமிழகத்தின் வேறு பல அரசு கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும். அதேசமயம், சென்னை மருத்துவ கல்லூரிகளில், இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்கப்பட்டால், நீங்கள் விரும்பும் கல்லூரியிலேயே இடம் கிடைக்க வாய்ப்புண்டு.


கார்த்திகேயன், விழுப்புரம்: எனது பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் 182. நாங்கள் பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது ஐ.டி., படிக்கலாமா? சென்னையில் டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?


கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி., படிப்புகள் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. வெறும் 4 பாடங்கள் தான் வித்தியாசம். எனவே, எது படித்தாலும் பிரச்னையில்லை. சென்னையில் டாப் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினம். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கல்லூரிகளில் இடம் கிடைக்கும். குமரகுரு, வேலம்மாள் மற்றும் புனித ஜோசப் போன்ற கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் இடங்கள் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us