வரலாறு, தொல்லியல் துறைகள் பல்கலைகளில் அவசியம் தேவை
வரலாறு, தொல்லியல் துறைகள் பல்கலைகளில் அவசியம் தேவை
UPDATED : மே 19, 2011 12:00 AM
ADDED : மே 19, 2011 10:53 AM
வரலாறு, தொல்லியல் துறைகள், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பேசினார்.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை, அருங்காட்சியகங்கள் பிரிவு, தென்மண்டலம் சார்பில், உலக அருங்காட்சியக தினம், சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மகத்தான பாரதத்தின் மரபுச் சின்னங்களில் மகாபாரதம் எனும் தலைப்பில், மகாபாரத நிகழ்வுகள் சிற்பங்களாக இடம் பெற்றுள்ள, பல்வேறு கோவில்களின் புகைப்பட கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை துவக்கி வைத்து, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பேசியதாவது: சிற்பக் கலைக்கும், நாட்டிய கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் கலாசாரப் பெருமையை உலகிற்கு உணர்த்துவதில், இக்கலைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. தொல்லியல் துறை குறித்த அறிவை நாம் வளர்த்துக் கொள்வதன் மூலம், சிற்பக் கலை பற்றி நன்கு அறியலாம். நம் நாட்டின் கலாசார பெருமைகளை, அடுத்த தலைமுறைக்கு அவசியம் நாம் கற்பிக்க வேண்டும்.
சிவகங்கை சீமையிலிருந்து வெள்ளையரை எதிர்த்துப் போராடி வென்ற, வேலு நாச்சியாரை பற்றி, நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இவரை போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றி இளைஞர்கள் அறியும் வகையில், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் வரலாறு, தொல்லியல் துறைகள் கட்டாயம் இருக்க வேண்டும். கோவை பாரதியார் பல்கலையில், வரலாற்று பாடம் இல்லையென்றும், சென்னை பல்கலையில், தொல்லியல் துறை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இக்குறைகளைப் போக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பத்மா சுப்ரமணியம் பேசினார்.
