பிளஸ் 2 உடனடி தேர்வு அட்டவணை வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம்
பிளஸ் 2 உடனடி தேர்வு அட்டவணை வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம்
UPDATED : மே 20, 2011 12:00 AM
ADDED : மே 20, 2011 11:01 AM
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வெழுதியவர்களில், ஆறு லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 950 பேர் தோல்வியடைந்தனர். இவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்காக, ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு மாணவர்களில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 602 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுக்கான உடனடித்தேர்வு, ஜூன் 22ம் தேதி முதல், ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உடனடித்தேர்வு அட்டவணை மட்டும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, உடனடித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடும்போதே, தேர்வு அட்டவணை விவரத்தையும், தேர்வுத்துறை வெளியிடும். ஆனால், இந்த ஆண்டு, தேர்வு அட்டவணையை வெளியிடாததால், எந்தெந்த தேதிகளில், எந்த பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என தெரியாமல், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
