தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது?
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் எப்போது?
UPDATED : மே 22, 2011 12:00 AM
ADDED : மே 22, 2011 11:44 AM
சென்னை: பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட 5,334 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில், தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் 2,804 பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க கல்வித் துறையில் 1,155 பட்டதாரி ஆசிரியர்கள், 175 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,200 பட்டதாரி ஆசிரியர்கள் என 5,334 ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வுப் பட்டியல், பிப்ரவரி 28ம் தேதி வெளியானது. இவர்களை பணி நியமனம் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்த நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானது.
இதனால், பணி நியமனப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. தேர்தல் முடிந்ததும், அனைவரும் பணி நியமனம் செய்யப்படுவர் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், பணி நியமனத்திற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. இதனால், தேர்வு செய்யப்பட்டு காத்திருக்கும் ஆசிரியர்கள், பணி நியமனம் கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படுவர். தேர்வுப் பட்டியல் ரத்தாவதற்கு வாய்ப்புகள் இல்லை. துறைக்கு புதிய அமைச்சர் பதவியேற்றுள்ளார். அவர், துறை வாரியாக தற்போது ஆய்வுப் பணிகளை செய்து வருகிறார். இந்தப் பணிகள் முடிந்ததும், ஆசிரியர் நியமன விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
நியமன முறை மாறுமா? முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர்களைத் தவிர, இதர ஆசிரியர்கள் அனைவரும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்து வந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து வகை ஆசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டிருப்பதால், ஆசிரியர் நியமன முறையில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
