UPDATED : மே 25, 2011 12:00 AM
ADDED : மே 25, 2011 10:48 AM
பணி வாய்ப்பு குறித்த களப்பணிகளைச் செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்ற "மா போய் ராண்ட்ஸ்டாடு" நிறுவனம் சமீபத்தில் இந்தியாவிலுள்ள எட்டு பெரு நகரங்களில் உள்ள 13 துறை சார்ந்த 650 நிறுவனங்களில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்த களப்பணி அறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய சாராம்சங்களை உங்களுக்காகத் தருகிறோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் ஹெல்த் கேர் துறையில் மட்டும் 2 லட்சத்து48 ஆயிரத்து 500 பணிகள் உருவாகும். ரியல் எஸ்டேட், ஹாஸ்பிடாலிடி, உற்பத்தி ஆகிய துறைகளில் இணைந்து 2 லட்சத்து 23 ஆயிரத்து 400 புதிய பணிகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 16 லட்சம் புதிய பணி வாய்ப்புகள் உருவாகும்.
இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாலும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் இந்த அளவு புதிய பணி வாய்ப்புகள் உருவாகும். புதிதாகப் பணி நியமனம் பெறுபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான ஊதிய விகிதங்கள் வழங்கப்படும் என்பதனை எதிர்பார்க்க முடியாது.
புதிய பணி நியமனங்களைப் பொறுத்த மட்டில் 70 சதவிகிதப் பணிகள் பிரெஷர்ஸ் எனப்படும் புதிய பட்டதாரிகளுக்கே கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ஹாஸ்பிடாலிடி, டிரான்ஸ்போர்ட், மீடியா, ரீடெய்ல், கல்வி ஆகிய துறைகளில் புதியவர்களுக்கே அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பிற துறைகளில் அனுபவசாலிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
மும்பை, புது டில்லி, சென்னை ஆகிய பெரு நகரங்களில் மட்டும் 2 லட்சத்து 70 ஆயிரம் பணி வாய்ப்புகள் தோன்றும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
