ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு: தமிழக அளவில் விபுல் வெங்கட்ராமன் முதலிடம்
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு: தமிழக அளவில் விபுல் வெங்கட்ராமன் முதலிடம்
UPDATED : மே 26, 2011 12:00 AM
ADDED : மே 26, 2011 10:19 AM
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை, நாடு முழுவதும், 4 லட்சத்து, 60 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. முதல், 100 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அளவில், விபுல் வெங்கட்ராமன் முதலிம் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "ஐ.ஐ.டி.யில் சேர, 9ம் வகுப்பிலிருந்தே, பயிற்சி வகுப்புக்கு சென்றேன். எதிர்பார்த்தபடியே சிறப்பிடம் பெற்றுள்ளேன். சென்னை அல்லது மும்பை ஐ.ஐ.டி.,யில் கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரிக்கல் படிப்பில் சேர உள்ளேன். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி., சிறந்த நிறுவனம் என்பதால், அதில் சேர விரும்பினேன்" என்றார்.
விபுலைத் தவிர, யஸ்வந்த் - 67வது இடத்தையும், வைஷ்ணவ் - 70, திவ்யா - 96வது இடத்தையும் பெற்று, தேசிய அளவில் முதல் நூறு இடங்களில் இடம்பெற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைக் கொண்ட சென்னை ஐ.ஐ.டி., மண்டலத்தில், 62 ஆயிரத்து, 880 பேர், நுழைவுத் தேர்வை எழுதினர்.
தமிழகத்தில் மட்டும், 8,583 பேர் எழுதினர். இதில், 227 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 27 பேர் பெண்கள். தேர்வு முடிவுகள் குறித்து, ஐ.ஐ.டி., சென்னை மண்டல பொறுப்பாளர் காமகோடி கூறும்போது, "இந்த ஆண்டு சென்னை மணடல மாணவர்கள் தேர்ச்சி சிறப்பாக உள்ளது. முதல், 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில், 5 பேர், சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். முதல், 100 இடங்களில், 30 பேர் இடம்பெற்று உள்ளனர்" என்றார்.
