குறித்த காலத்தில் பாடப் புத்தகங்கள் கிடைப்பது சிக்கல்
குறித்த காலத்தில் பாடப் புத்தகங்கள் கிடைப்பது சிக்கல்
UPDATED : மே 29, 2011 12:00 AM
ADDED : மே 29, 2011 11:18 AM
வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை, அச்சக உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தும், சுமுக முடிவு ஏற்படவில்லை. குறுகிய காலத்திற்குள் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டிய நெருக்கடி நிலை இருப்பதை பயன்படுத்தி, அச்சக உரிமையாளர்கள் மூன்று மடங்கு விலையை உயர்த்தியுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
ஜூன் முதல் வாரத்தில், பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த, முந்தைய தி.மு.க. அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக, ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வி திட்டம் தரமாக இல்லை என்று கூறி நிறுத்தி வைத்தது. இந்தாண்டு மட்டும், பழைய பாடத்திட்டங்களே அமலில் இருக்கும் என்றும், சமச்சீர் கல்வி பாடத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்தியபின், இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வி திட்டங்களில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படைப்புகளும், அவர் பெயரும் இடம் பெற்றிருந்ததும், இத்திட்டத்தை நிறுத்தியதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனினும், பள்ளிகள் திறக்கும் நேரத்தில், திடீரென சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியதால், பழைய பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அவர்கள் வழக்கம்போல் தனியார் பதிப்பகங்களிடம் இருந்து பாடப் புத்தகங்களை வாங்க, ஆர்டர் கொடுத்து விட்டனர். ஆனால், அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, அரசு பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். இந்த பாடப் புத்தகங்கள், ஸ்டாக் இல்லாததால், பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கு வசதியாக, பள்ளிகள் திறக்கும் தேதியை, ஜூன் 15க்கு தள்ளி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, பழைய பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கு, அச்சக நிறுவனங்களிடம் இருந்து, பாடநூல் கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது.
கடைசி நாளான 27-05-11 வரை 152 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. ஆனால் அன்று மாலையிலேயே, டெண்டர் திறக்கப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப ரீதியிலான குறைகளை காரணம் காட்டி, 48 விண்ணப்பங்களை நிராகரித்தனர். மீதமுள்ள 80 அச்சகங்களின் பிரதிநிதிகளிடம், புத்தகங்களை அச்சடிப்பதற்கான விலை குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெரும்பாலான அச்சக அதிபர்கள், விலையை மூன்று மடங்கு உயர்த்தி கேட்டுள்ளனர். ஏற்கனவே ஏ-4 அளவுள்ள நான்கு பக்கங்களை அச்சடிக்க 34 ரூபாயும், எட்டு பக்கங்களை அச்சடிக்க 68 ரூபாயும் வழங்கப்பட்டு வந்துள்ளது. தற்போது, ஏ-4 அளவில் எட்டு பக்கங்களை அச்சடிக்க, 200 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர்.
பெரும்பாலான அச்சக அதிபர்கள், இதே தொகையை நிர்ணயித்திருப்பது, அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அனைவரும், சிண்டிகேட் அமைத்து ஒரே தொகையை நிர்ணயம் செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விலையில், எட்டு கோடி பாடப் புத்தகங்களையும் அச்சடிக்க, பெரும் தொகையை செலவிட நேரிடும் என்பதால், விலையை குறைப்பது தொடர்பாக, அச்சக அதிபர்களிடம், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முடிவு எட்டப்படாததால், அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
28-05-11 அன்று காலை முதல் மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியது. இதற்கிடையே, பாடநூல் கழகத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட சவுண்டையா, அதேநாள் காலை புதிய பொறுப்பை ஏற்றார். இவரும், அச்சக உரிமையாளர்களிடம் பேசி பார்த்தார். ஆனால், முடிவு எட்டப்படவில்லை. இதனால், விலையை நிர்ணயம் செய்வதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெயரை வெளியிட விரும்பாத அச்சக உரிமையாளர் ஒருவர் கூறும்போது, "ஒரு சிலர், 100 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். பெரும்பாலான அச்சக நிறுவனங்கள், 200 ரூபாய் நிர்ணயித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இழுபறிக்கு, அதிகமாக விலை நிர்ணயித்தது தான் காரணம். இனி, ஆர்டர் கொடுத்தாலும், 15 நாட்களில் பாடப் புத்தகங்களை கண்டிப்பாக அச்சிட முடியாது. குறைந்தது, இரண்டு மாதங்களாவது தேவைப்படும்&' என்றார்.
குறைந்த கால அவகாசத்தில், பாடப் புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அச்சக நிறுவனங்கள் மூன்று மடங்கு விலையை உயர்த்தியிருப்பதால், திடீர் சிக்கல் எழுந்துள்ளது.
ஜூன் 15ம் தேதி புத்தகங்கள் கிடைப்பது சந்தேகமே: பதினைந்து நாட்களுக்குள், 10ம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைவருக்கும், காலாண்டு தேர்வு வரைக்குமான மூன்று மாத பாடத்திட்டங்களை முதலில் அச்சடித்து வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கான விலையை நிர்ணயம் செய்து, அதன்பின் தேர்வு செய்யப்படும் அச்சக நிறுவனங்களுக்கு, பேப்பர்களை சப்ளை செய்ய வேண்டும். இப்பணிகள் எல்லாம் முடிய, மேலும் சில நாட்கள் தேவைப்படும். அதன்பின், அச்சுப் பணியை ஆரம்பித்து முடிப்பதற்குள் பள்ளிகள் திறக்கப்பட்டு விடும். புத்தகங்களை அச்சடிக்க, குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவைப்படும் என்று, அச்சக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
