பொறியியல் படிப்பிற்கு விரைவில் தர வரிசைப் பட்டியல் வெளியாகிறது
பொறியியல் படிப்பிற்கு விரைவில் தர வரிசைப் பட்டியல் வெளியாகிறது
UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM
ADDED : ஜூன் 01, 2011 10:28 AM
அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: பொறியியல் படிப்பிற்கு, கடந்த 16ம் தேதி முதல், கடைசி நாளான இன்று வரை (நேற்று), ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 245 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடைசி நாளில், 2,730 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இணையதளம் மூலம், 3,000 பேர், விண்ணப்பங்களை, "டவுண்லோடு" செய்துள்ளனர். 57 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பெற்ற மாணவர்கள், ஜூன் 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 3ம் தேதிக்குள் அனுப்பியிருந்தால், அவை இரண்டு நாள், மூன்று நாளுக்குப்பின் வந்தாலும், அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதால், அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கினர். இந்த ஆண்டு, தேர்வு முடிவுக்குப்பின் வழங்க ஆரம்பித்ததால், மாணவர்கள் நிதானமாக யோசித்து விண்ணப்பங்களை வாங்கினர். இதனால், இந்த குறைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்தபின், தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
