UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM
ADDED : ஜூன் 01, 2011 03:22 PM
தமிழ்நாட்டில் பி.இ. படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் மூலம் நடத்தி வருகிறது.
அதே போல இந்த வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் மூலம் நடத்த உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 16-ந்தேதி முதல் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த விண்ணப்பங்கள் தமிழநாடு முழூவதும் 62 மையங்களில் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை பெற நேற்று கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க ஜூன் 3-ந்தேதி கடைசி நாள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து தபால்களில் அனுப்பிய விண்ணப்ப படிவங்கள் தபால் அலுவலகங்கள் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து இறங்கியது.
விண்ணப்பம் வந்து சேர்ந்தது என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று கேட்டதற்கு மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தர்ராஜ் கூறிய விளக்கம் வருமாறு :
2011-2012 ஆண்டுக்கான என்ஜினீயரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங்குக்கு 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. ஜூன் 3-ந்தேதிதான் விண்ணப்பிக்க கடைசிநாள்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது எல்லா சான்றுகளும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து விண்ணப்பங்களை அனுப்புங்கள். விண்ணப்பத்தை அனுப்பிய பின்பு ஏதாவது தவறாக அனுப்பி விட்டாலோ அல்லது அனுப்ப வில்லை என்றாலோ அது குறித்த விவரத்தை ஒரு மனுவாக எழூதி அதை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ அனுப்புங்கள். அதில் குறிப்பாக மாணவர்களின் விண்ணப்ப பதிவு எண்ணை மறக்காமல் எழூதவேண்டும்.
அதுபோல அனுப்பிய விண்ணப்பம் அண்ணாபல்கலைக்கழகத்தை சென்றடைந்ததா என்பதை அறிய அண்ணாபல்கலைக்கழக இணையதளத்தில் wwww.annauniv.edu சென்று டி.என்.இ.ஏ.2011 ஐ கிளிக் செய்தால் வலது புறத்தில் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்குயரி என்று வரும். அதில் கிளிக் செய்து மாணவர்களின் அப்ளிகேஷன் நம்பரை போட்டால், அப்ளிகேஷன் பிராசசிங் என்று வந்தால் வந்து சேர்ந்தது என்று அர்த்தம். இல்லையென்றால் வரவில்லை என்பது பொருளாகும்.
முதல் தலைமுறை பட்டதாரி
முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் டியூசன் கட்டணம் ரத்து. மாணவர் அல்லது மாணவியின் பெற்றோர் மற்றும் தாயின் பெற்றோர், தந்தையின் பெற்றோர் பட்டப்படிப்பு படித்திருக்கக்கூடாது.
முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கு தாசில்தாரிடம் சான்று பெற்று அனுப்ப வேண்டும். முதலில் கிராம அதிகாரியிடமும், பின்னர் வருவாய் ஆய்வாளரிடமும் சான்று பெற்று இறுதியில் தாசில்தார் சான்று அளிப்பார். இந்த சான்று விண்ணப்பத்துடன் அனுப்ப இயலாதவர்கள் அதற்கு பின்னர் செயலாளர், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை2011, அண்ணாபல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-25 என்று முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் தவறாமல் அதில் விண்ணப்பத்தின் ரிஜிஸ்டர் நம்பர் குறிப்பிடவேண்டும். எவ்வளவு விரைவாக அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்புவது நல்லது.
வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்துக்கும் ரேண்டம் நம்பர் வழங்கப்படும். ரேண்டம் நம்பர் கொடுத்துவிட்டால் அப்ளிகேஷன் சரியாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப மனுக்கள் மீது 1-ந்தேதி முதல் பரிசீலனை நடைபெறும். இந்த பரிசீலனை 25 நாட்கள் நடைபெறும். அப்போது சரியானவை ஏற்கப்படும். சரி இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும். அதன்பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே கூறியபடி அப்ளிகேஷன் ஸ்டேடஸ் என்குயரிக்கு சென்று பார்த்தால் தகுதியானவை என்று வரும். இல்லையென்றால் வராது. உடனே நீங்கள் ஏதோ விண்ணப்பத்தில் குறிப்பிட தவறு செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உடனே நேரடியாக அல்லது கடிதம் மூலம் தொடர்பு கொண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அதன்பின்னர் ரேங்க் பட்டியல் போடப்படும். ரேங்க் பட்டியல் போட்டபின்னர் எந்த மாற்றமும் செய்யமுடியாது. இவ்வாறு பேராசிரியர் ரைமண்ட் தெரிவித்தார்.
