UPDATED : ஜூன் 08, 2011 12:00 AM
ADDED : ஜூன் 08, 2011 10:47 AM
அதிகாலையில் எழுவது என்பது, பொதுவாக அனைவருக்குமே நல்லது என்றபோதிலும், இந்த அறிவுரை குறிப்பாக மாணவர் சமூகத்தின் மீதுதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இளம் வயதிலேயே இந்த நல்ல பழக்கத்தை பழக வேண்டும், படிப்பதற்கு உகந்த நேரம், டென்ஷன் இல்லாமல் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ கிளம்பலாம், உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம், பிரார்த்தனை மற்றும் தியானம் செய்யலாம், புறப்படுவதற்கான முன்னேற்பாடுகளை பதட்டமின்றி செய்யலாம் என்பன போன்ற பலவித காரணங்கள் உள்ளன்.
இவற்றில் சில விஷயங்களை இரவிலேயே செய்யலாம் என்றாலும், அதிகாலை என்பது எப்போதுமே சிறப்புதான். அது ஒரு நாளின் துவக்கம். அந்த துவக்கம் என்பதுதான் அதன் சிறப்பே. எனவேதான், துவக்கத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும் இரவில் முறையான தூக்கம் என்பது பொதுவான நல்ல விஷயம். உடலின் சம நிலைக்கு அந்த தூக்கமே உதவுகிறது. அதிகாலையில் எழுந்திருப்பதானது நமது மனதுக்கு ஒரு தன்னம்பிக்கையை தருகிறது. இதுபோன்ற பல காரணங்களால் அதிகாலையில் எழுவது வலியுறுத்தப்படுகிறது.
எனக்கு இரவில்தான் படிக்க பிடிக்கும். நான் ஒரு "ராக்கோழி" என்று சொல்லும் மாணாக்கர்களும் கணிசமாக உள்ளனர். அதை தவறு என்று சொல்ல வரவில்லை. அனைத்திலுமே விதிவிலக்குகள் உண்டு. காலையில் நெடு நேரம் உறங்காமல் விரைவாக எழுவது(குறைந்தபட்சம் சூரியன் உதித்தவுடன்) உங்களின் பதட்டத்தை தணிக்க உதவும் என்பதுதான் இங்கே முக்கியம்.
வேகவேகமாக காலைக்கடன்களை முடிப்பீர்கள், வேகவேகமாக உண்பீர்கள், பிரார்த்தனை செய்ய நேரம் இருக்காது, ஒருவேளை எதையாவது மறந்து வைத்துவிட்டு செல்லலாம், பேருந்தை தவற விடலாம். ஒருவேளை இருசக்கர வாகனத்தை பயன்படுத்தினால், அது வழியில் பஞ்சர் ஆனாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ, அதை சரிசெய்ய நேரம் இருக்காது. ஒருவேளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ நடந்து சென்றால் வியர்த்து விறுவிறுக்க நடக்க வேண்டும். எதையாவது மறந்து விட்டோமா என்றுகூட யோசிக்க நேரம் இருக்காது.
இதனால்தான், "ராக்கோழிகளாக" இருந்தாலும் கூட, காலையில் சீக்கிரம் எழுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு முழு நாளையும் எப்படி செலவழிக்கலாம் என்று திட்டமிட முடியும். துவக்கமே சூப்பராக இருந்தால் முடிவுவரை அனைத்துமே நன்றாக இருக்கும். அதுதான் பொதுவான ஒரு உளவியல் நம்பிக்கை. எனவே மிகவும் அதிகாலையிலேயே எழாவிட்டாலும் கூட, குறைந்தது சூரியன் உதித்தவுடனேயாவது எழுவது நலம். அப்போதுதான் மேற்சொன்ன பிரச்சினைகளை தவிர்த்து, நாம் கூறியுள்ள நன்மைகளை பெற முடியும்.
