UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM
ADDED : ஜூன் 15, 2011 10:35 AM
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை 1 மற்றும் 6ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டிலேயே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து கல்வியாளர்கள் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவில், தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவினர், 7 முதல் 10ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப் புத்தகங்களை ஆய்வு செய்து அதன் இறுதி அறிக்கையை இருவார காலத்திற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆய்வு முடிவினை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சமச்சீர் கல்வியை 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு இந்த கல்வியாண்டிலேயே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
