பிளஸ் 2 பாட புத்தகத்தில் இருந்த செம்மொழி முத்திரை மறைப்பு
பிளஸ் 2 பாட புத்தகத்தில் இருந்த செம்மொழி முத்திரை மறைப்பு
UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM
ADDED : ஜூன் 15, 2011 10:11 AM
பிளஸ் 2 பாட புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள செம்மொழி மாநாட்டை விளக்கும் திருவள்ளுவர் சிலை படத்தை மறைக்கும் பணியில் கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக, கடந்த ஆண்டுகளில் அச்சடித்த புத்தகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தி.மு.க., ஆட்சியில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டினை விளக்கும் வகையில், திருவள்ளுவர் சிலை மற்றும் கவிஞர்களின் கவிதைகள், முத்திரை இடம் பெற்றிருந்தது. இந்த முத்திரையை அரசு பஸ்களில் ஒட்டியிருந்தனர். அதே போன்று அரசு அலுவலகங்கள், பள்ளி பாட புத்தகங்களின் பின் அட்டையில் இம்முத்திரை இடம் பெற்றிருந்தது.
முத்திரை மறைப்பு: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், இந்த முத்திரையை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக, பிளஸ் 2 பாடப்புத்தகங்களின் பின் அட்டையில் உள்ள திருவள்ளுவர் சிலை பொறித்த செம்மொழி மாநாட்டு முத்திரையை மறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புத்தகத்தில் உள்ள முத்திரையை பச்சை நிற அட்டை கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஊழியர்கள் மறைத்து வருகின்றனர்.
