UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM
ADDED : ஜூன் 16, 2011 10:46 AM
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே கிரவுன் ரெப்ரசண்டேடிவ் போலீஸ் என்ற பெயரில் 1939ல் நிறுவப்பட்ட சி.ஆர்.பி.எப்., 1949ல் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 60 ஆண்டு களுக்கும் மேலாக மிக வெற்றிகரமாக இயங்கி வரும் சி.ஆர்.பி.எப்.,பில் 207 பட்டாலியன்கள், 37 குழு மையங்கள், 11 பயிற்சி மையங்கள், நான்கு மருத்துவமனைகள் உள்ளன.
இந்த அமைப்பில் 5 பிரிவுகளில் மொத்தம் 79 துணை மற்றும் உதவி துணை ஆய்வாளர்களைப் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
என்னென்ன பிரிவுகள்
சி.ஆர்.பி.எப்.,பின் துணை ஆய்வாளர் காலி இடங்களில் ரேடியோ ஆபரேட்டர் பிரிவில் 10 இடங்களும், கிரிப்டோ பிரிவில் 4 இடங்களும், டெக்னிகல் பிரிவில் ஒரு இடமும், உதவி துணை ஆய்வாளர் டெக்னிகல் பிரிவில் 63 இடங்களும், டிராப்ட்ஸ்மேன் பிரிவில் ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸின் துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உச்ச பட்ச வயது 30 ஆகவும், உதவி துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதி
ரேடியோ ஆபரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கணிதம், இயற்பியல்அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாகக் கொண்டுபட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கிரிப்டோ பிரிவுக்கு
விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கணிதம், இயற்பியலைப் பாடமாகக் கொண்டு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் பட்டப்படிப்பு அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உதவி துணை ஆய்வாளர் டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பை ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பை ரேடியோ இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அல்லது ஹார்டுவேர் பிரிவில் பயிற்சி பெற்றவர்களுக்கும், பி.எஸ்சி., பட்டப்படிப்பை இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுடன் படித்தவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது.
டிராப்ட்ஸ்மேன் பிரிவிற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பை ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் மூன்றாண்டு கால டிராப்ட்ஸ்மேன் டிப்ளமோ படிப்பை சிவில் அல்லது மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பை அரசு அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி
சி.ஆர்.பி.எப்.,பின் ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உயரம் குறைந்த பட்சம் 170 செ.மீ.,யும், இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். மார்பளவு குறைந்த பட்சம் 80 செ.மீ.,யும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ.,யும் இருக்க வேண்டும். எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும் இந்த அளவில் சில சலுகைகள் உள்ளது. விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை ஆகிய முறைகளில் சி.ஆர்.பி.எப்.,புக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
சி.ஆர்.பி.எப்.,பின் காலியிடங்களுக்கு புது டில்லி, ஐதராபாத், கோல்கட்டா ஆகிய ஏதாவது ஒரு பணி நியமன மையத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.10/க்கான போஸ்டல் ஆர்டரை Commandant, ____________Signal BN, CRPF என்ற பெயரில் விண்ணப்பிக்கும் மையத்தில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்து அதனுடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து 30.06.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 30.06.2011
