உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வியில் சேர இலங்கை அகதிகளுக்கு அனுமதி
உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வியில் சேர இலங்கை அகதிகளுக்கு அனுமதி
UPDATED : ஜூன் 18, 2011 12:00 AM
ADDED : ஜூன் 18, 2011 10:13 AM
தமிழகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் இலங்கை அகதிகளின் குழந்தைகளை சேர்க்க, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு: தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு முடித்து தேர்வு பெற்ற இலங்கை அகதிகளின் குழந்தைகளை, நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக, இரண்டாமாண்டு பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான ஒற்றை சாளர கலந்தாய்வில் பங்கேற்கவும், அதுபோல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., ஆகிய முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஒற்றை சாளர கலந்தாய்வில் பங்கேற்கவும் விரும்பும் மாணவர்கள், வட்டாட்சியரிமிருந்து அடையாள சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், அகதிகள் முகாம்களில் பதிவு செய்யாதவர்கள், அவர்களுடைய விசா மற்றும் பாஸ்போர்ட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வில், பொறியியல் கல்லூரிகளில் மற்ற மாணவர் சேர்க்கை முடிவுற்ற பின், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மிகாமலும், பொதுப்பிரிவின் கீழ் காலியிடங்கள் ஏதும் இருப்பின் அதில் இலங்கை அகதி மாணவர்களை சேர்க்க, அரசு அனுமதி அளிக்கிறது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
