சிறுபான்மையினருக்கான உதவித் தொகை சரியே நீதிமன்றம் கருத்து
சிறுபான்மையினருக்கான உதவித் தொகை சரியே நீதிமன்றம் கருத்து
UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM
ADDED : ஜூன் 21, 2011 10:08 AM
சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு தந்திடும் உதவித் தொகை சரியானது தான் என மும்பை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உதவித் தொகைக்கு எதிரான பொது நல வழக்குகளை டிஸ்மிஸ் செய்துள்ளது.
அரசிடம் உதவித் தொகையை வழங்கிடும் பொருளாதார சக்தி இருந்தால், சிறுபான்மையினரில் சிறப்பாகப் படிப்பவருக்கு அந்த உதவியை செய்வதில் என்ன தவறு உள்ளது என நீதிமன்றம் வினவியுள்ளது. மத்திய அரசின் மைனாரிட்டி ஸ்காலர்ஷிப் திட்டமானது ஏப்ரல் 2008ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உதவித் தொகையால் பெரும்பான்மையினரில் இதே போன்ற அடிப்படைகளைக் கொண்டிருப்போர் அரசால் சமமாக நடத்தப்படவில்லை என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்த உதவித் தொகை திட்டமானது இட ஒதுக்கீட்டுத் திட்டத்தோடு ஒப்பிடப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது. சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் படி முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் கல்வியில் மத்திய அரசு கூடுதல் பங்கு வகிக்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே புதிய உதவித் தொகைத் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே கல்வி முன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு நாட்டின் கல்விச் செலவில் பெரும்பங்கை மானியங்கள் மூலமாக தந்து வருவதை மும்பை நீதிமன்றம் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
