UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM
ADDED : ஜூன் 21, 2011 10:30 AM
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும் கவுன்சிலிங் நடக்கும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
இது குறித்து அமைச்சர் பழனியப்பன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மொத்தம், 494 உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீடான, 1 லட்சத்து, 25 ஆயிரம் இடங்களுக்கான கவுன்சிலிங்கிற்கு, வரும் 24ம் தேதி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியலின்படி, வரும் 30ம் தேதி துவங்கும் கவுன்சிலிங், 35 நாட்கள் வரை நடைபெறும். சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும் கவுன்சிலிங் நடக்கும்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில், புதிதாக ஐந்து தொழில்நுட்ப பல்கலைகள் ஏற்படுத்தப்பட்டன. இவை மீண்டும், சென்னை அண்ணா பல்கலையுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளன. இவ்வாறு பழனியப்பன் கூறினார்.