UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 11:16 AM
புதிய கட்டணத்திலும் அதிருப்தி: வழக்கு தொடர முடிவு :
தனியார் பள்ளிகளில், ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெரும்பாலான பள்ளிகள் ஏற்க மறுத்து வழக்கு தொடர முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் சங்க மாவட்ட செயலர் ராமச்சந்திரன் கூறியதாவது: ரவிராஜபாண்டியன் குழுவின் கட்டண அறிவிப்பும் ஏமாற்றமளிக்கிறது. இதில், பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் இன்கிரிமென்ட், பி.எப்., தொகை, கட்டட பராமரிப்பு, அதற்காக வாங்கிய கடன், வட்டியை திருப்பி செலுத்துவது என பலவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
வருமானம், செலவு போன்றவற்றை மட்டுமே கணக்கிட்டுள்ளனர். இதனால், உபரிநிதி இருப்பதாக கருதி நிர்ணயித்துள்ளனர்; இதுசரியானதல்ல.
கட்டண அதிருப்தியாளர்கள், ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெறலாம். அதற்கு இறுதி நாள் என எதுவும் இல்லை. மதுரையில், அதிருப்தியான தலா பத்து பள்ளிகள் வரை ஒன்றிணைந்து, சட்ட நிபுணர் உதவியுடன் ரிட் தாக்கல் செய்யலாமா என அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.
பள்ளிகளை பொறுத்தவரை, ஸ்மார்ட் கிளாஸ், ஏசி வசதியுடன் உள்ளவர்கள், கூடுதல் கட்டணம் பெற்றுக்கொள்ள வழி உள்ளது. கல்விக் கட்டணம் குறித்து நடவடிக்கை எடுக்க தனியார் பள்ளிகள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றன. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
மேலும் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: எங்களை பொறுத்தவரை, பெற்றோர் தங்கள் குழந்தைகளை வசதியான, தரமான பள்ளியில் சேர்க்க விரும்பித்தான் வருகின்றனர். கட்டணம் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால், கட்டணம் குறித்து போராடுவதாக சித்தரிக்கின்றனர். கட்டணம் பற்றி கவலைப்படுவோர் அரசுப் பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகளில் சேர்க்க ஏன் முன்வருவதில்லை? இந்நிலை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரிகளில் இல்லையே? மாணவர்கள் நலன்கருதி பள்ளிக் கட்டணம், பாடத் திட்டத்தில் அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
