மருத்துவ படிப்பில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவியர்
மருத்துவ படிப்பில் மாநில அளவில் இடம் பிடித்த மாணவியர்
UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 11:54 AM
இருதய நிபுணராகி, ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வது என் எதிர்கால குறிக்கோள், என மருத்துவத்துக்கான ரேங்க் பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி சிவரஞ்சினி தெரிவித்தார்.
ராசிபுரம், ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி சிவரஞ்சினி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,182 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் நான்காம் இடம் பிடித்தார். அம்மாணவி, மருத்துவத்துக்கான ரேங்க் பட்டியலில், 200க்கு, 200 கட்-ஆப் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவி சிவரஞ்சினி கூறியதாவது: மருத்துவ ரேங்க் பட்டியலில், மாநில அளவில் முதலிடம் வருவேன் என எதிர்பார்த்தேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அளித்த ஊக்கமும், அதிக மதிப்பெண்ணும் காரணம். எம்.எம்.சி.சி., மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறேன். இருதய நிபுணராகி ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வது என் எதிர்கால குறிக்கோள். இவ்வாறு சிவரஞ்சினி தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,187 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த, நாமக்கல் க்ரீன் பார்க் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி தக்ஷிணி, மருத்துவ ரேங்க் பட்டியலில், 200க்கு 200 கட்-ஆப் பெற்று, மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தக்ஷிணி கூறுகையில், "மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியலில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது, பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. எதிர் காலத்தில் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்" என்றார்.
