UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 02:33 PM
கிடைப்பதற்கரிய ஒரு தொழிற்கல்வி இடம் இதுபோன்ற செயலால் வீணாவது மட்டுமல்லாமல், வேறு ஒருவருக்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு நல் வாய்ப்பை இதன் மூலம் தடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. எனவே, மாணவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குரு கோபிந்த் சிங் இந்த்ரபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் இ.என்.டி. பாடப் பிரிவில் மருத்துவ முதுகலை படித்து வந்த டாக்டர் முவீன் குமார், ஆறு மாதங்கள் கழிந்த நிலையில், அதே பல்கலையில் வேறொரு படிப்பிற்கு நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். இதனால் அந்த படிப்பில் சேருவதற்காக, தான் ஏற்கனவே படித்து வந்த இ.என்.டி. படிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். இந்த முடிவை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து டாக்டர் முவீன் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்து, கிடைப்பதற்கரிய மருத்துவச் சேர்க்கை இடத்தை வீணடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று கூறி ஒரு நபர் நீதிமன்ற பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
முவீன் குமார் மேல்முறையீடு செய்த மனு, நீதிபதிகள் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் சஹாய் என்ட்லா மற்றும் ஜி.பி. மிட்டல் ஆகியோர் மாணவரது இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், தங்களது தீர்ப்பில், இது நிச்சயமாக ஒரு பொது நலன் தொடர்பான வழக்குத்தான். தனி நபர் பிரச்சினையாக மட்டும் இதனை கருத முடியாது. கிடைப்பதற்கரிய ஒரு தொழிற்கல்வி சேர்க்கை இடம் வீணாவதை ஏற்க முடியாது.
ஒரு மருத்துவக் கல்லூரி இயங்க, மாணவர் அளிக்கும் கல்வி கட்டணம் மட்டுமே போதாது. அதில் ஏராளமான பொது மக்கள் பணமும் சேர்ந்துள்ளது. பொதுமக்களின் பணத்தைக் கொண்டு நடத்தப்படும் கல்லூரியில், ஒரு விலை மதிப்பற்ற சேர்க்கை இடம் வீணாவது மிகவும் மோசமான விஷயமே.
மாணவர் தனக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவை முதலிலேயே தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். தற்போது அதனை மாற்ற விரும்புவது, மற்றொருவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்து கீழே போடுவதற்கு இணையாகும் என்று கண்டித்துள்ளனர்.
வருங்காலத்திலும் மாணவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
