UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 10:54 AM
போட்டி நிறைந்த இந்த உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும், என, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பேசினார்.
திருச்சி நேஷனல் கல்லூரியில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் பேசியதாவது:போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.கடந்த, 1980ல் நாங்கள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்த போது துவக்க ஆட்டத்தில் மெதுவாகத் தான் விளையாடுவோம். அப்போதே துவக்க ஆட்டத்திலேயே வேகமாக ஆட துவங்கினேன். என் துவக்க ஆட்டத்தை பார்த்து விட்டு கிண்டல் செய்தார்கள்.
இப்போது கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது. துவக்க ஆட்டமே வேகமாகத் தான் நடக்கிறது.ஆகவே, மாறுதல் வரும்போது கிண்டலும், கேலியும் நாம் எதிர்கொள்ளும் நிலை வரலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்று இருந்து விடக்கூடாது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.கிரிக்கெட்டில் ரிச்சர்டு, சேவக், டெண்டுல்கர் ஆகியோரை பிடிக்கும். டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது மாத்திரமல்ல. அவர் கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டவர். எதையும் உள்ளார்ந்த ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.
இந்திய கிரிக்கெட்டில் சீனியர் எல்லாம் இருக்கும் போது இரண்டாவது அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றுள்ளனர்.ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாதனை படைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு ஸ்ரீகாந்த் பேசினார்.
